வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தற்போது சென்னையிலிருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ள நிலையில் அதற்கு மிக்ஜம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மிக்ஜம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து, 4ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் கன மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வரும் டிச. 4ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.