இந்து முன்னணி அமைப்பின் கலை கலாச்சாரப் பிரிவு மாநிலத் தலைவர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கரூரில் இந்து முன்னணி அமைப்பினர் 20 பேர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திருந்தனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை மதுரவாயலில் நடந்த ஒரு கூட்டத்தில், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர், ‘ஸ்ரீரங்கத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்' என்று பேசியிருந்தார். கனல் கண்ணன் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன. புகாரின் அடிப்படையில் புதுவையில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியில் கரூர் மாவட்ட இந்து முன்னணி அமைப்பினர் சுமார் 20 பேர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட ஆயத்தமாகினர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.