ஓமலூர் அரசு மருத்துவமனையில் ஆய்வுக்கு சென்ற மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு முதியவர் ஒருவருக்கு பேரனே முதலுதவி செய்து கொண்டிருந்ததைக் கண்டு அங்கிருந்த செவிலியர்களிடம் அதிருப்தி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம், ரத்த வங்கி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேசிய தரச்சான்று ஆய்வுக் குழுவினர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையின் கட்டமைப்பு மற்றும் வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்விற்காக திடீரென சென்று இருந்தார். அப்போது மருத்துவமனையில் நாய் கடித்து அனுமதிக்கப்பட்ட முதியவர் ஒருவருக்கு அவருடைய பேரன் முதலுதவி செய்து கொண்டிருந்தார். சிறுவனின் அருகில் சென்ற அமைச்சர், செவிலியர்கள் யாரும் முதலுதவி செய்யவில்லையா என கேள்வி எழுப்பினார். உடனே அங்கு வந்த செவிலியரிடம் நீங்க ட்ரெஸ்ஸிங் பண்ணாமல் முதியவரின் பேரன் டிரெஸ்ஸிங் பண்ணிக் கொண்டிருக்கிறார். அட்மிட் ஆகி எவ்வளவு நேரம் ஆகிறது எனக் கேட்டார். இப்பொழுதுதான் அட்மிட் ஆனார்கள் என தெரிவித்தனர். இருப்பினும் உடனடியாக கவனிக்க வேண்டும் என அமைச்சர் செவிலியர்களை கடிந்துகொண்டார்.