ஆங்கிலபள்ளி மோகத்தில் அரசாங்க பள்ளியில் தங்களின் குழந்தைகளை சேர்ப்பதையே இழிவாக நினைக்கும் இந்தகாலத்தில், அரசு பள்ளியில் சேர்த்ததோடு மேலதாளம் முழங்க சீர் எடுத்து சென்ற காட்சி திருவாரூர் மாவட்டத்தையே திரும்பி பார்க்கவைத்திருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் மணக்கால் ஐயம்பேட்டையில் நூறு ஆண்டுகளை தாண்டி இயங்கிவருகிறது ஊராட்சி ஒன்றியதுவக்கப்பள்ளி, மணவர்களின் வருகை இன்னும் குறைந்திடவில்லை. இருந்தபோதிலும் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக, பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர் சங்கத்தினர் தெருத்தெருவாக சென்று மக்களை அனுகி அரசின் கல்விக்காக ஒதுக்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினர்.
அதன் பயணாக 63 மாணவர்கள் ஒரே நேரத்தில் சேர்ந்தனர். புதிதாக பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகளையும் செய்திருந்தனர் ஆசிரியர்கள், அவர்களோடு குழந்தைகளின் பெற்றோர்களும் படிக்கும் குழந்தைக்கு தேவையான பெண்சில், பேனா உள்ளிட்ட பொருட்களை சீர்தட்டில் வைத்து சீராக எடுத்துக்கொண்டு பிள்ளைகளை அழைத்துவந்தனர்.
புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி மகிழ்வித்தனர். அதோடு பள்ளியின் சிறப்பு குறித்தும், அரசு பள்ளியில் படிப்பதால் கிடைக்கும் 16 வகையான உதவிகள் குறித்தும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எடுத்துக்கூறி பேசி மகிழ்ந்தனர் ஆசிரியர்கள்.