அரசு தகவல்களை மின்னணு முறையில் பெற
வசதிகோரிய வழக்கு;மத்திய,மாநில அரசுக்கு நோட்டீஸ்
தமிழக அரசு துறைகளின் தகவல்களை மின்னணு முறையில் தகவலறியும் சட்டத்தில் பெறும் வகையில் இணைய தளத்தை உருவாக்கக்கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய மற்றும் மகாராஷ்டிர அரசுகள் போல தமிழக அரசும் தனியாக இணையதளத்தை உருவாக்கினால் தகவலறியும் சட்டத்தின் கீழான நடவடிக்கைகளில் ஏற்படும் அஞ்சல் செலவுகளும், கால விரயமும் தடுக்கப்படும் என திருச்சியை சேர்ந்த மருத்துவ மாணவர் முகமது காதர் மீரான் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில் "2005ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டப்படி, ஒவ்வொரு துறையும் அதன் நிர்வாக அமைப்பு, பணியாளர்கள் எண்ணிக்கை, துறை அதிகாரிகளின் அதிகாரங்கள், ஆவணங்களின் வகைகள், தானாக முன்வந்து வெளியிடும் தகவல்கள் ஆகியவற்றை சட்டம் அறிமுகப்படுத்தபட்ட 120 நாட்களில் வெளியிட வேண்டும் என அறிவுறுத்திய நிலையில், தற்போது வரை தமிழக அரசு செயல்படுத்தவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை கோரி தமிழக அரசிடம் கடந்த மே மாதம் அளித்த மனு மீதான விளக்கம திருப்தியில்லாததால் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளதாக முகமது காதர் மீரான் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மத்திய, மாநில அரசுகளின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர்களும், தேசிய தகவல் மையம் உள்ளிட்டோர் நான்கு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- ஜீவாபாரதி