திருச்சி மாவட்டம், துறையூர் சிறுநாவலூர் பகுதியைச் சேர்ந்த ரகுநாதன்(39), சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் பி.பி.எட் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2ஆம் தேதி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், திருச்சி மாவட்ட அதிமுக அலுவலகத்திற்கு நான் எனது நண்பர்களுடன் அடிக்கடி சென்று வந்தநிலையில், மேலசிந்தாமணியைச் சேர்ந்த திருச்சி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் சகாதேவ் பாண்டியன் என்பவர் எனக்கு அறிமுகமாகினார். அதே சமயத்தில் சகாதேவ் பாண்டியனின் தம்பி என்று பிரவீன் என்பவர் அறிமுகமாகி தன்னுடைய அண்ணன் சகாதேவ் பாண்டியன் கட்சியில் பெரிய பொறுப்பில் இருக்கிறார். அவர் மூலம் நான் பணியிடமாறுதல், அரசு வேலை என்று பலருக்கு வாங்கி தந்துள்ளேன். உங்களுக்கும் அரசு வேலை வேண்டுமென்றால் என்னைத் தொடர்புகொள்ளுங்கள் என்று அவருடைய செல்போன் எண்ணை கொடுத்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 லட்சம் ரூபாய் பிரவீன் வங்கி கணக்கில் செலுத்தினேன். என்னுடைய சேமிப்பும் என்னுடைய மனைவியின் நகை உள்ளிட்டவற்றை அடமானம் வைத்து மொத்தம் 7 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தேன். மேலும் என்னுடைய நண்பர்களுக்கும் வேலை வாங்கி தருவதாக கூறியதன் பேரில், துறையூர் சிறுநாவலூரை சேர்ந்த தீனதயாளன் 4 லட்சமும், கண்ணன் 50 ஆயிரமும், ராமநாதபுரம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் 50 ஆயிரமும், வண்ணான்குண்டு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் 2 லட்சமும், வேள்ளகளி பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் 2 லட்சமும், எஸ்.வி.மங்களம் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் 2 லட்சமும், முத்துமாலை என்பவர் 1 லட்சமும் என மொத்தம் 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வேலை வாங்கி தருவதாக கூறி சகாவேத் பாண்டியனை நேரில் சந்தித்து அவர் உறுதியளித்ததின் பேரில் பிரவீன் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.
ஒரு மாதத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியவர் இன்றுவரை வேலை வாங்கி தரவில்லை. கொடுத்தப்பணத்தை திரும்ப கொடுக்கவுமில்லை, பணம் கேட்கும்போதெல்லாம் வேலை நிச்சயம் வாங்கி தருகிறேன் என்றுகூறி பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர். எனவே நாங்கள் அவா்களிடம் கொடுத்த பணத்தை திரும்ப பெற்று தந்திட வேண்டும் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே சகாதேவ் பாண்டியன், அவரது தம்பி பிரவீன், அவரது சித்தப்பா தனபால் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.