மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டை சங்க நிர்வாகக் கட்டிடம் உள்ளது. அந்த கட்டடத்துக்குள், ஏராளமான கணினிகள், வாளிகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை, அ.தி.மு.க.வினர் பதுக்கி வைத்துள்ளதாக தேர்தல் அதிகாரிகளிடம் தி.மு.க. தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தேர்தல் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்திற்குச் சென்று சோதனை நடத்தி அவற்றைப் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூபாய் 30 லட்சம் எனக் கூறப்படுகிறது. அந்த கட்டடத்தில் உள்ளே இருந்த வாளியில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரில், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் படமும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படமும் உள்ளன. அதேபோல், அட்டைப் பெட்டியில் எண்ணற்ற பொருட்கள் இருப்பதாக தகவல் கூறுகின்றன.
இதனிடையே, தொழிற்பேட்டைக் கிடங்கின் பூட்டு திறக்கப்படாததால் தேர்தல் அதிகாரிகளிடம் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, பூட்டைத் திறந்து சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து விளக்கமளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "ஜெயலலிதாவுக்காக கோயில் கட்டியபோது வாங்கிய பொருட்கள் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. தேர்தல் நடத்தை விதிகளுக்கு முன்பே கணினி, வாளிகள் உள்ளிட்ட பொருட்கள் கிடங்கில் இருந்தன. அ.தி.மு.க.வினர் பரிசுப் பொருட்களைப் பதுக்கியதாகத் தவறான தகவல் பரப்பப்படுகிறது" என்றார்.