இந்திய-சீன நாடுகள் பரஸ்பரம் தாக்கிக்கொண்ட நிலையில், இரு தரப்பிலும் ராணுவ வீரர்களின் உயிரிழப்புகள் ஏற்பட்டன. எல்லை பகுதிகளில் பதட்டம் அதிகரித்தபடி இருக்கிறது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள 'தமிழ் பேரரசு கட்சி'யின் பொதுச்செயலாளர் வ.கெளதமன், "இந்திய ஒன்றியத்தின் எல்லை பகுதியான லடாக்கில் சீனப் படைகள் அரங்கேற்றிய தாக்குதலில் இந்திய படை அதிகாரி உட்பட 20 வீரர்களுடன் நம் தமிழ்நாட்டு தமிழரான இராணுவ வீரர் திரு.பழனி அவர்களும், உயிரிழந்த சம்பவத்தை கேட்டு ஆற்றமுடியா துயரத்தில் அமைதி இழந்து போனேன். உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் கரோனா நோய்த் தொற்றால் நிலைகுலைந்து போயிருக்கையில் சீன அரசு தேவையற்ற ஒரு சர்வதேச அரசியலை கையில் எடுத்திருக்கிறது.
இயற்கை தங்கள் மீது தொடுத்திருக்கும் பொருளாதார போரை சரிகட்ட இயலாமல் கையறு நிலையிலிருக்கும் பல நாடுகள் இனி இது போன்று மக்களை ஏமாற்றும் மடைமாற்ற செயல்களில் ஈடுபடக் கூடும். இதனை ஒருபோதும் மனிதகுலம் ஏற்காது. உலக நாடுகள் அனைத்தோடும் ஒன்றிணைந்து கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமியை அழிக்க போர் வியூகம் எடுப்பதை விட்டுவிட்டு, சீனாவும், இந்தியாவும் இப்படி தேவையற்ற மோதல்கள் நடத்துவதை மறு பரிசீலனை செய்யவேண்டும்.
மனிதர்களான நாம் யாராக இருந்தாலும், கரோனா நோய்தொற்றால் சந்தேகிக்கப்பட்டு 15 நாட்கள் தனிமைபடுத்தினாலே மனமுடைந்து போகிறோம். இந்நேரத்தில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் எல்லை பகுதி யுத்தத்தினால் மரணம் அடைந்திருப்பது அறமற்ற பெரும் கொடுமை. எண்ணற்ற வீரர்கள், மனைவி, பிள்ளைகள் என அனைவரையும் பிரிந்து எல்லை தெய்வங்களைப்போல் தம்மக்களை காக்க உயிராயுதம் ஏந்தி போராடிக் கொண்டிருந்த தன்னலமற்ற வீரரான திரு.பழநி என்கிற ஒரு மகத்தான போர் வீரரை நாம் இழந்து நிற்கிறோம். இன்னும் ஓராண்டில் ஓய்வு பெற வேண்டிய நிலையில், இந்தியாவின் பாதுகாப்பிற்காக நிரந்தர ஓய்வை மேற்கொண்ட திரு.பழநியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலுடன் எமது கண்ணீரையும் காணிக்கையாக்குகிறோம்.
திரு.பழநியின் இரண்டு பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு வழிகோலுவதுடன் அன்னாரின் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய, தமிழக அரசுகள் செய்து தர வேண்டும் " என வேண்டுகோள் வைத்திருக்கிறார்.