தமிழகத்தில் கடலூர் - பாம்பன் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும் என்பதால் தமிழக அரசு அந்தந்த மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து உள்ளது.
அதன்படி திருவாரூர் மாவட்டத்திற்கு சமூகநலம் மற்றும் சத்துணவுதிட்டத்துறை அரசு முதன்மை செயலாளர் திருவாரூர் மாவட்ட கணிப்பாய்வு அதிகாரியாக மணிவாசகம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இன்றைய தினம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் மற்றும் அதிகாரி மணிவாசகம் ஆகியோர் தலைமையில் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் புயல் பாதிப்பிலிருந்து பொதுமக்களையும், கால்நடைகளையும் பாதுகாப்பது குறித்தும், பாதிப்புகளை தடுக்கும் விதமாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் திருவாரூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 212 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு 249 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ள பாதிப்பை தடுப்பதற்காக பொதுப்பணித்துறை மூலம் 16 இடங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி சாக்குகளும் 92 மணல் மூட்டைகளை 4700 சவுக்கு குச்சிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அலுவலர் மணிவாசகம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் பொதுமக்கள் அவசர உதவிக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04366 - 226040, 226050, 226080, 226090 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம், புயல் மீட்பு பணிகளுக்காக அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மற்றும்135
குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என மணிவாசகம் தெரிவித்தார்.