தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் ஆசிரியர் பணிக்காக படித்துவிட்டு வேலைக்காக காத்துக்கொண்டுள்ளனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் நூற்றுக்கணக்கில் உருவாகி லட்சக்கணக்கானோர் பி.எட், எம்.எட், எம்.பிஎல், பி.எச்டி என முடித்தார்கள். அப்போது படிக்காமலே பலர் பட்டம் பெற்றுள்ளார்கள் என சர்ச்சை எழுந்தது. இதனால் ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வு வைக்க முடிவு செய்தது தமிழ்நாடு அரசு.
அதன்படி தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் (TRB) தேர்வுகள் நடத்திவருகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களை மதிப்பெண் சீனியாரிட்டிப்படி பணியில் சேர்க்கிறது. தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் பி.ஜி என கல்லூரியில் முதுகலை பயின்றவர்களுக்கான தேர்வு நடத்துகிறது. பிப்ரவரி 16ஆம் தேதி முதுகலை கணக்கு பாடத்துக்கான தகுதி தேர்வு நடத்துகிறது.
அதே பிப்ரவரி 16ஆம் தேதி யுஜிசி, பேராசிரியர் பணிக்கு தகுதி தேர்வு நடத்துகிறது. இரண்டு தகுதி தேர்வுகளும் ஒரேதேதியில் நடப்பதால் இரண்டு தேர்வுக்கும் விண்ணப்பம் செய்த பட்டதாரிகள் தற்போது அதிர்ச்சியிலும், கவலையிலும் உள்ளனர். டி.ஆர்.பி அல்லது யூஜிசி இரண்டில் ஒன்றில் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார்கள் தேர்வு எழுதுபவர்கள்.