திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் நாசர் ஆய்வு செய்தனர். இதனை அடுத்து மழைநீரை வெளியேற்ற உடனடியாக உத்தரவுகளை பிறப்பித்தனர்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “நாங்கள் என்ன செய்தாலும் எதிர்க்கட்சிகள் குற்றம் சொல்லும். அதன் பெயர் தானே எதிர்க்கட்சி. கடந்த ஆண்டு தண்ணீர் தேங்கிய இடங்களில் ஒரு சொட்டு கூட இந்த ஆண்டு தண்ணீர் தேங்காமல் ஒரே ஆண்டில் இத்தனை பணிகளையும் செய்திருப்பது தான் முதல்வரின் சாதனை” எனக் கூறினார்.
இதற்கு பின் மேற்கு மாம்பலம் அருகே அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் மா.சுப்பிரமணியம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் நேரு, “முதல்வர் நிதி ஒதுக்கித் தந்ததாலும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நகர் மன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள்.
இப்பொழுது சிறுது நின்றுள்ள மழை மீண்டும் 9 ஆம் தேதி துவங்கும் என்று சொல்கிறார்கள். அதற்குள் கால்வாய்களில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற பொருட்களை அகற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கட்டாமல் இருக்கும் பகுதிகளில் எங்கு கட்ட முடியுமோ அதை முடிக்க வேண்டும். சாலைகளும் சீர் செய்யப்பட வேண்டும். வருகிற மழை எவ்வளவு பெரிய மழையாக இருந்தாலும் அதை நகராட்சித்துறை நிச்சயமாக எதிர்கொள்ளும்.
சாலைகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் இதற்காக 8500 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். 3 ஆண்டு காலத்தில் அதை செய்து முடிப்போம். அரசாணையும் வெளியிடப்பட்டுவிட்டது” எனக் கூறினார்.