காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு என்பதெல்லாம் வாடிக்கையாகிப் போனது. இந்த நிலையில் சிவகாசி டவுண் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் செல்லம்மாள் இன்ஸ்பெக்டர் சுபகுமார் கூறிய அலுவல் பணியைச் சரிவரச் செய்யாமலும் பணிக்கு வராமலும் இருந்ததால் ‘ஆப்சென்ட்’ போட்டுள்ளனர். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான காவலர் செல்லம்மாள் இன்ஸ்பெக்டர் சுபகுமார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது ‘எனக்கு மட்டும் ஏன் ஆப்சென்ட் போட்டீங்க? அவங்களுக்கு ஏன் ஆப்சென்ட் போடல?’ என்று சிலரது பெயரைக் குறிப்பிட்டு அவருடன் வாதம் செய்திருக்கிறார்.
அப்போது, தான் எடுத்துச் சென்ற மண்ணெண்ணையை தன் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த செல்லம்மாளை சக காவலர்கள் தடுத்து மீட்டனர். இந்த விவகாரத்தை சிவகாசி டி.எஸ்.பி. பாபு பிரசாந்த் விசாரித்து விருதுநகர் மாவட்ட காவல்துறை நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்பினார். இதனைத் தொடர்ந்து காவலர் செல்லம்மாளை விருதுநகர் மாவட்ட எஸ்.பி.மனோகர் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
காவலர் செல்லம்மாள் தீக்குளிக்க முயற்சித்த விவகாரம் குறித்து கேட்க சிவகாசி டவுண் காவல்நிலைய ஆய்வாளர் சுபகுமாரை தொடர்புகொண்டோம். “அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை நடக்கிறது” என்று சிம்பிளாக முடித்துகொண்டார்.
பெண் காவலர் செல்லம்மாள் மனஉளைச்சலால் பொறுமை இழந்து தனது மேலதிகாரியிடம் வாக்குவாதம் செய்து தீக்குளிக்க முயற்சிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு சஸ்பென்ட் ஆனது காவல்துறை வட்டாரத்தில் பரிதவிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.