நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாட்டின் தலைநகரில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஒன்று கூடி போராட்டம் நடத்த இருக்கிறார்கள்.
விவசாயிகளின் வாழ்க்கை என்பது பல்வேறு இன்னல்களுக்கு இடையே சென்று கொண்டு இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மார்ச் மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக 180 கிலோமீட்டர் தூரம் 5 தினங்கள் நடந்து அனைத்து தரப்பு கவனத்தையும் ஈர்த்தனர்.
ஏழை விவாயிகளின் கடன் தள்ளுபடி, காண்டரேக்ட் முறையை ஓழிக்க வேண்டும், ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்து விவசாயிகளின் பொருட்களுக்கு லாபம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், பணி பாதுகாப்பு, இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தரவேண்டும், விவசாய தொழிலாளிகளுக்கான தனி சட்டம் வேண்டும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை தரவேண்டும் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டமானது நடைபெறுகிறது.
கேரளா கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த மாநிலத்திலிருந்து பல்லாயிரம் கணக்காண விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள். நாடு முழுவதுமிருந்து வாகனங்கள், ரயில்கள் மூலம் விவசாயிகள் டெல்லி சென்று இருக்கிறார்கள். இந்த மாபெரும் போராட்டத்தை இடதுசாரிகள் விவசாய அமைப்புகள், மஸ்தூர்- கிசான் சங்கங்கள் ஒருங்கிணைந்து நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.