நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் 17 ஆம் தேதி வேளாண்மை தொடர்பான மானிய கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற உள்ளது. அந்த விவாதத்தில் வேளாண் தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித்தொழிலாளர்கள் என அனைவரது குடும்பமும் ஒரு விவசாயியோ அல்லது விவசாயக் கூலித்தொழிலாளரோ விபத்தில் சிக்கி உடல் ஊனமோ அல்லது உயிரிழப்போ ஏற்படின் அவர்களது குடும்பம் நடுத்தெருவிற்கு வந்து விடும் சூழல் உள்ளது. எனவே அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குள்ளாகிறது. எனவே தான் இந்நிலையைப் போக்க ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு கிடைக்கும் வகையில் சிறப்பு காப்பீடுத் திட்டம் கொண்டுவரப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த திட்டம் ஒன்றே விவசாயிகளுக்கு நம்பிக்கையையும் தொடர்ந்து விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் நம்மைக் காக்க அரசு இருக்கிறது என்ற பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தும். எனவே இலாபகரமான நியாயமான விலை கிடைக்கவும் அடிப்படை ஆதார விலையினை தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும். எளிதில் அழுகக்கூடிய பொருளான தக்காளி உள்ளிட்ட பொருட்களில் பழச்சாறு தயாரித்து விவசாயிகளுக்கு உதவிட அரசு நீரா பானத்துக்கு கொடுத்து வரும் முக்கியத்துவத்தில் இதற்கும் வழங்க வேண்டும்.
சிக்கிம் மாநிலம் போல் தமிழகத்தை முழு அளவில் இரசாயனமற்ற இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இரசாயன பூச்சிக் கொல்லிகள் இல்லாத ஆரோக்கியமான இயற்கை வேளாண்மையில் விளைந்த உணவுப் பொருட்களை மருந்து பயன்படுத்தாத காய்கறிகளை உற்பத்தி செய்து நோயற்ற சமுதாயத்தை உருவாக்க தமிழக முதல்வர் அவர்கள் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.