கரோனா அச்சத்தில் நாடே தவிக்கும்போது டாஸ்மாக் கடையை திறக்க தமிழக அரசு துடிக்கிறது. இது குறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம் இந்தியாவில் கரோனா தொற்று தாக்குதலில் 2ம் இடத்தில் முதல் கட்ட பரவல் தீவிரமடைந்தது. தமிழக அரசும் பொதுமக்களும் இணைந்து மேற்கொண்ட முயற்சியால் 6,7 வது இடத்திற்கு சென்றது. தமிழக அரசோடு மக்களும் இணைந்து மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளால் கரோனாவிற்கு மருத்துவமே இல்லாத நிலையில், சமூக இடைவெளியும், தங்களை விடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டதுமேதான் நோய் தொற்று குறைவதற்கு காரணமாக அமைந்தது.
மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில் குடிக்காரர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு காவல்துறை கடுமையாக போராடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் துவங்கி கரோனா தொற்று தீவிரவேகமாக பரவி வருவதோடு பெரும் பேரபாயமும் ஏற்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து குறிப்பாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 2ம் கட்டமாக தீவிரமடைந்து வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுக்கடைகளை தமிழகம் முழுவதும் திறக்க அனுமதித்ததின் மூலம் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத பேராபத்து ஏற்பட்டுள்ளது. குடிக்காரர்களின் குடும்பங்களை சார்ந்த பெண்கள் தனது வருவாயை வைத்து பிள்ளைகளின் உயிரை கரோனா தொற்றிலிருந்து பாதுக்காத்து வருகின்றனர். தற்போது மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளதால் மதுக்குடித்துவிட்டு வீட்டுக்கு வரப்போகும் கணவன்களால் குடும்பமே கரோனா தொற்று ஏற்பட்டு அழிந்து விடுமோ? என்று பெண்கள் மனமுடைந்து பரிதவிக்கின்றனர்.
தற்போது சென்னையில் நோய் தொற்றின் தாக்கத்தை உணர்ந்து மது விற்பனைக்கு தடை விதித்துள்ளதாக வந்துள்ள தகவல் ஆறுதல் அளிக்கிறது. அதே நேரம் கடந்த 3 நாட்களாக சென்னை மக்கள் தொகையை மற்ற மாவட்டங்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை சென்னைக்கு இணையாகவே தெரிகிறது.
உண்மை நிலை இவ்வாறு இருக்க சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதியளித்துப்பது கிராமப்புறங்களிலும் நோய் தொற்றால் பேரழிவு ஏற்படும் என்பதை உணர்ந்து சிவப்பு, ஆரஞ்சு நிற கரோனா பாதிப்பு மாவட்டங்களிலும் மதுக்கடைகள் திறப்பதை தமிழக முதலமைச்சர் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன் எனக்கூறியுள்ளார்.