கோவை, நீலகிரி பகுதிகளில் தென்மேற்கு பருவக் காற்றால் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூரில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பவானிசாகர் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழையால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 100 அடி கொண்ட பில்லூர் அணைக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் வருவதால் நீர்மட்டம் 95 அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 97 அடியை எட்டும்போது அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் என்பதால் அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு ஆட்சியர் ராசாமணி அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,916 அடியிலிருந்து 6,817 அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 86.14 அடியாக உள்ளதால் நீர் இருப்பு 19.16 டி.எம்.சி. ஆக உள்ளது. நீர் திறப்பு 300 அடியாக அதிகரித்துள்ளது. மேலும் கூடலூர் காலம்பூழா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நீலகிரி கூடலூர் பகுதியில் கனமழை காரணமாக காலம்பூழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புறணவயல் பழங்குடியினர் கிராமம் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியது. வெள்ளத்தில் தவித்த சுமார் 30 பேரை வருவாய் துறையினர் மீட்டு நிலையில் மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதிகபட்சமாக நீலகிரி கூடலூரில் 20 சென்டிமீட்டர் மழையும் தேவாலயாவில் 10 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.