தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தின் வி.ஆர்.எஸ். கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டதால், அரசுப் பணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். சகாயம் ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்தவர். திறமையான அதிகாரிகளை முக்கியத்துவமில்லாத துறைகளில் நியமித்து அவர்களை முடக்கிவைப்பது அதிமுக அரசின் எழுதப்படாத விதி. அதில் சிக்கிக்கொண்டவர் சகாயம்.
ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளால் மன உளைச்சலில் இருந்த சகாயம், அரசுப் பணியிலிருந்து விருப்பு ஓய்வு பெறுவதாக மூன்று மாதங்களுக்கு முன்பு, முதல்வர் எடப்பாடி அரசிடம் கடிதம் கொடுத்திருந்தார். அவர் கடிதம் கொடுத்ததை அடுத்து, ஏன் இந்த முடிவு? என்று ஒருநாள் கூட அவரிடம் தலைமைச் செயலாளர் சண்முகம் விசாரிக்கவில்லை.
இந்நிலையில், அவரது விருப்ப ஓய்வு கோரிக்கையை எடப்பாடி அரசு ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துவிட்டது. இதனைத் தொடர்ந்து அரசுப் பணியிலிருந்து விலகிக் கொண்டார் சகாயம். மூன்று வருடம் சர்வீஸ் இருக்கும் நிலையில், அவர் விலகியுள்ளார். 'லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்' என்கிற முழக்கத்துடன் கடந்த பல வருடங்களாக இயங்கிவந்த சகாயம், சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அரசியலுக்குள் இழுக்க அவரைப் பலரும் அணுகியுள்ளனர். இதனால், அரசியலுக்கு வருவாரா? அல்லது ஐ.ஏ.எஸ். அதிகாரியான சந்தோஷ்பாபு வழியில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைவாரா? என்கிற கேள்விகள் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன
இதுகுறித்து கருத்தறிய அவரை நாம் தொடர்புகொண்டபோது, அவரது எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. சகாயம் கவனித்துவந்த அறிவியல் நகரத்தின் துணைத்தலைவர் பதவியை ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ்.சிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைத்துள்ளது எடப்பாடி அரசு.