சென்னையில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் தண்ணீர் தேங்குவதைத் தவிர்ப்பதை உறுதிப்படுத்த அமைச்சர்களும் களத்தில் இறங்கி பணியாற்றுகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ. வேலு கூறியதாவது, “இரண்டு தினங்களாக தொடர்ந்து சென்னையிலேயே மழை விடாமல் பெய்துகொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் முதல்வர் அந்தந்த துறை அமைச்சர்களை அழைத்து துறையின் சார்பாக அங்கங்கு மக்களுக்கு எந்தவித இடையூறு இல்லாமல் பணிகளை செய்யுமாறு ஆணை பிறப்பித்துள்ளார்.
அந்த அடிப்படையில்தான் நேற்றும் (07.11.2021), இன்றும் தொடர்ந்து சென்னையைச் சுற்றிச் சுற்றி நெடுஞ்சாலைதுறை சார்ந்த பாலங்கள், நீர் போக்கிகளெல்லாம் முறையாக செயல்படுகிறதா என்கிற ஆய்வு பணிகளை தொடர்ந்து செய்துவருகிறேன். இரண்டாம் நாளாக இன்று வேளச்சேரி பகுதி, குறிப்பாக பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதி, பல்லாவரம் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள 16 பாலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் முறையாக தண்ணீர் செல்கிறதா என குழுவுடன் சேர்ந்து பார்த்துவருகிறோம். அதேபோல் சுரங்கப்பாதையில் தேங்கியிருக்கும் தண்னீர் வெளியேற்றப்பட்டு வாகனங்கள் இயங்கிவருகின்றது.
சென்னையிலேயே பெரிய சுரங்கப்பாதையான தில்லை கங்கா சுரங்கப்பாதையிலும் தற்போது அனைத்து நீரும் சுத்தமாக வெளியேற்றப்பட்டுள்ளது. அதேபோல் முதல்வரும் பந்தை போல் வேகமாக ஆங்காங்கே சென்று துறை சார்ந்த பணிகளை முடுக்கிவிட்டுவருகிறார். இதில் முதல்வரே ஈடுபடும்போது அமைச்சர்கள் எங்களுக்கு உந்து சக்திதான். இந்தமுறை வெள்ளப் பாதிப்பு அதிகமாக ஏற்படாத வகையில் சிறப்பாக செயல்பட்டுவருகிறோம்” என்றார்.
மேலும் பத்திரிகையாளர்கள், வேளச்சேரி மற்றும் பள்ளிக்கரனை பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்திருப்பதைப் பற்றி கேட்டத்தற்குப் பதிலளித்த அமைச்சர், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ரூ. 70 கோடி மதிப்பில் ஒரு திட்ட மதிப்பை வழங்கியிருக்கிறார். அது நிறைவேற்றப்பட்ட உடன், தற்போது தேங்கும் மழை நீர் கூட தேங்காத நிலை உருவாகிவிடும்” என்றார்.