Skip to main content

மருந்து பொருட்களின் ஆன்லைன் விற்பனையைத் தடை செய்திட வேண்டும்; வணிகர் மாநாட்டில் தீர்மானம்

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

erode fortieth traders association mega conference urge ban for  online medicine sale 

 

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே டெக்ஸ்வேலி மைதானத்தில் 40வது வணிகர் தினத்தை ஒட்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் உரிமை முழக்க மாநாடு இன்று (05.05.2023) தொடங்கியது. மாநாட்டுக்கு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமை தாங்கினார். அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில் பாலாஜி, மா.சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

 

இன்று நடந்த 40வது வணிகர் உரிமை முழக்க மாநாட்டில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு: உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி, அறநிலையத்துறை கடைகளுக்கான முன் தேதியிட்ட வாடகை விதிப்பு அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறும், 2007ஆம் ஆண்டு அரசு அறிவிப்பின்படி சந்தை, மதிப்பீட்டின் அடிப்படையில் வாடகை நிர்ணயித்திடவும் வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற்று தற்போது உள்ள உரிமையாளர்களின் பெயரில் மாற்றம் செய்திட அரசு துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும். வணிக உரிமைகள் அனைத்தும் ஒரே இடத்தில் , ஒரே நேரத்தில் ஒற்றைச் சாளர முறையில் ஆயுள் உரிமமாக வழங்கிட வேண்டும். அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்திடும் முறையை அரசு அறிவித்திட வேண்டும் விதிமீறல் கட்டிடங்களுக்குக் கட்டிட வரைமுறை கால நீட்டிப்பு நகரமைப்பு சட்டங்களில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடப் பகுதிகளைக் கால இடைவெளி உடன் இளம் காணத் தமிழகம் முழுவதும் சட்டத் திருத்தம் வேண்டும்.

 

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நிற்கும் வணிகர்களுக்கு அவர்கள் செலுத்தும் வரியின் அடிப்படையில் ஓய்வூதியமும், காப்பீடும், குடும்ப நல நிதியும், இயற்கை பேரிடர் மற்றும் தீ விபத்துகளால் பாதிக்கப்படும் காலங்களில் வணிகர்களுக்கும் , வணிக குடும்பங்களுக்கும் அரசே காப்பீடு செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் இழப்பீடுகள், வழங்கிடவும் வேண்டும்.ஜிஎஸ்டி வரி முறையில் செய்யப்பட்டு வரும் தினசரி மாறுதல் மற்றும் திருத்தங்கள் காரணமாகத் தொழில் வணிகத்துறை மிகுந்த குழப்பத்தில் பல்வேறு இனங்களைச் சந்தித்து வருகிறது. எளிய வரி என்கிற இலக்கை எட்ட மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை மறு சீராய்வு செய்து ஒரே நாடு ஒரே வரி என்ற பிரதமரின் கொள்கையை உறுதிப்படுத்திச் சரியான வரியை நிர்ணயம் செய்ய வேண்டும். சிறு குறு வணிகர்களும் எளிதாகக் கையாளும் விதமாகவும், வணிகர்களுக்கு எதிரான ஜிஎஸ்டி வரி குளறுபடியையும், முரண்பாடுகளையும் கலைந்திட வேண்டும். இதற்காக வணிகப் பிரதிநிதிகள் இணைந்து ஒரு உயர்மட்ட குழுவை அமைத்திடவும் பழைய பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி ஒரே நிலையில் அதாவது 5 சதவீதம் மட்டுமே அமல்படுத்திடப் பேரமைப்பு வலியுறுத்துகிறது.

 

நடைமுறையில் உள்ள உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில் உள்ள முரண்பாடுகளை உரிய ஆய்வுகளுடன் களைந்து, ஆயுள் உரிமமாக அறிவித்திடவும் சாலையோர கடைகளை முறைப்படுத்திடவும் அபராதம் மற்றும் தண்டனைச் சட்டங்களில் உரிய மாற்றங்களைச் செய்திடவும் வலியுறுத்தப்படுகிறது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு பெருகிடப் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடவும் உற்பத்தி சார் தொழில்களை ஊக்கிவிக்கவும் பெருநகரங்கள் நோக்கி பொதுமக்கள் புலம் பெயர்வதைத் தடுத்திடவும் தொழில் பூங்காக்கள் குறிப்பாகத் தென் மாவட்டங்களில் திருநெல்வேலி தூத்துக்குடி மதுரை, விருதுநகர் ராமநாதபுரம் மாவட்டங்களில் அமைத்திடத் தமிழரசு துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் மத்திய மாநில அரசுகளே அனுமதி வழங்கி அதற்கு முரண்பட்ட காரணங்களைச் சொல்லி முடக்கி வைக்கின்ற தொழில் நிறுவனங்களை மீண்டும் திறந்து வேலை வாய்ப்பை உருவாக்கி சமூக கட்டமைப்பைச் சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

உயிர்காக்கும் மருந்து பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதைக் கண்டிப்பாகத் தடுக்கப்பட வேண்டும். அந்நிய நேரடி முதலீட்டு ஆன்லைன் வர்த்தகத்தை முறைப்படுத்திட வேண்டும். ஜவுளித்துறை நூல் மூலப்பொருள் விலை ஏற்றம் கட்டுப்படுத்திட வரி குறைப்பு செய்திட வேண்டும். ஈரோடு பெருநகரின் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் தோல் பதனிடும் தொழில் மற்றும் சாயக் கழிவுகள் சுத்திகரிக்கப்பட, ஒரு மைய சுத்திகரிப்பு நிலையம் உடனடியாக அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதைத் தவிர்த்திடும் வகையில் வெளிப்புற சுற்று வட்டப் பாதை காவிரிக் கரையை ஒட்டி நெடுஞ்சாலை அமைத்து இதர மாவட்டங்களோடு போக்குவரத்தை இணைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகர் நல வாரியம் நல வாரிய உறுப்பினர்கள் நிர்வாகிகள் நியமத்தோடு முழுமை பெற்ற வாரியமாக வணிகர் நலன் காத்திடப் பேரமைப்பு வலியுறுத்துகிறது" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

 

சார்ந்த செய்திகள்