ஈரோடு மாவட்டம், சென்னிமலை பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் ஆய்வு மேற்கொண்டு, அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் ஜனவரி 1ந் தேதி முதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் முழுவதும் பினாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில் மாவட்ட ஆட்சியர் தி சி.கதிரவன் ஈடுபட்டு வருகிறார்.
இன்று சென்னிமலை பேரூராட்சி, சென்னிமலை முருகன் கோவில் பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் மலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்கு துணிப்பை தயார் செய்து வழங்க வேண்டும் எனவும் சோதனைச் சாவடி அலுவலர்கள் அதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து சென்னிமலை முருகன் கோவில் மலையடிவாரத்தில் உள்ள பூக்கடைகளிலும், அப்பாய் செட்டி வீதி பகுதியில் இருந்த இறைச்சி கடைகள், காங்கேயம் ரோடு மேற்கு பகுதியில் இருந்த சுமார் 50 கடைகளில் இருந்து 25 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தார் மேலும் அரசு அதிகாரிகள் தினந்தோறும் வனிக நிறுவனங்களில் ஆய்வு செய்ய வேண்டும் என்ற அவர் கடை உரிமையாளார்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸப்டிக் பொருள்கள் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறினார்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மொத்த விற்பனையாளரை கண்டறிந்து பேரூராட்சிப் பகுதிக்குள் நுழையாத வண்ணம் கண்காணிக்கவும் ஆணையிட்டுள்ளார். அதே போல், ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள கொங்கலம்மன் கோயில் வீதி மற்றும் ஈரோடு இரயில் நிலையங்களில் செயல்படும் சுமார் 35-க்கும் மேற்பட்ட கடைகளில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு திடீர் சோதனை மேற்கொண்டதில், சுமார் 15 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. இனி வருங்காலங்களில் இதேபோன்று தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பிளாஸ்டிக் மெருகூட்டப்பட்ட தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட கேக் பக்கம், தெர்மகோல் உபயோகப்படுத்தக்கூடாது என்று வணிகர்களிடம் அதிகாரிகள் கூறினார்கள். மேலும் உணவு வணிகங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.