ஈரோடு வ.ஊ.சி பூங்காவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வருகிற 22ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 2 ஆம் தேதி வரை தொடர்ந்து இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் உள்பட மொத்தம் 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் வருகை தரவுள்ளனர். அதற்கான ஆயத்தப் பணிகள் ஈரோட்டில் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு வ.ஊ. சி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஈரோடு கலெக்டர் கதிரவன், எஸ்பி சக்தி கணேசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பிறகு கலெக்டர் கதிரவன் நிருபர்களுகளிடம் கூறியதாவது:- ஈரோடு வ.ஊ. சி விளையாட்டு மைதானத்தில் வருகிற 22ஆம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை 10 நாட்கள் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அவர்கள் தேவையான அடிப்படை வசதிகள் கழிப்பறை வசதிகள் ஆகியவை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். நாளொன்றுக்கு 3000 பேர் வீதம் பத்து நட்களுக்கு 30 ஆயிரம் பேர் வரை வர வாய்ப்பு உள்ளது. 10 நாட்களாக நடைபெறும் முகாமை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும். இந்த முகாம் அமைதியான முறையில் நடந்து முடிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது." இவ்வாறு அவர் கூறினார்.
30 ஆயிரம் பேர் வரை வரவுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் கூறினாலும் மேலும் ஒரு மடங்கு கூடுதலாக இளைஞர்கள் வருகை இருக்கும் சில இடங்களில் கழிவறை வசதிகள் செய்யப்பட்டாலும் வருகிற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்குவதற்கும், தூங்குவதற்கும் சிரமப்பட வேண்டிய நிலையே இருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.