Skip to main content

குடியரசுத் தலைவர் வரவுள்ள நிலையில் குண்டுவீச்சு - இ.பி.எஸ். கண்டனம் 

Published on 26/10/2023 | Edited on 26/10/2023

 

EPS Condemn for governor issue
கோப்புப் படம் 

 

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ரவுடி கருக்கா வினோத். இவர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதனைப் பற்ற வைத்து நேற்று (25.10.2023) பிற்பகல் ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீசியுள்ளார். உடனடியாக அங்கு இருந்த பாதுகாப்பு போலீசார் விரைந்து சென்று கருக்கா வினோத்தை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நவம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ரவுடி கருக்கா வினோத் இன்று (26.10.2023) காலை 06.30 மணியளவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

 

ஆளுநர் மாளிகை வெளியே பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளப்பக்கமான எக்ஸில், “தமிழ்நாடு ஆளுநர் மாளிகையான சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவன் வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கிற்கு அடையாளமாக விளங்கும் ஆளுநர் மாளிகையிலேயே இத்தகைய சம்பவம் நடந்திருப்பது தமிழகத்தின் பாதுகாப்பையும், மாண்பையும், அமைதி பூங்கா  என முன்பு தமிழ்நாட்டிற்கு இருந்த அடையாளத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. 

 

இந்திய குடியரசுத் தலைவர் தமிழ்நாடு  ஆளுநர் மாளிகைக்கு வரவுள்ள நிலையில், அடிப்படை பாதுகாப்பிற்கே குந்தகமான செயல்கள் நடந்திருப்பது, தமிழக உளவுத்துறையும், காவல்துறையும் இந்த ஆட்சியில் மொத்தமாக செயல் இழந்து விட்டதையே வெளிக்காட்டுவதுடன், தமிழகம் பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் சேர்ந்துவிட்டதோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

 

மேலும் குண்டுவீசி பிடிபட்ட நபர் இரண்டு நாட்கள் முன்னர் தான் சிறையில் இருந்து வெளிவந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அப்படியானால் ஆளுநர் மாளிகை குண்டுவீச்சுக்கான திட்டம் சிறையிலேயே திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகமும், இதற்கு பின் மிகப்பெரிய சதிவலை பின்னபட்டிருப்பதும் உறுதியாகிறது.

 

மாநிலத்தின் உச்சபட்ச பாதுகாப்புக்குறிய ஆளுநர் மாளிகைக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பற்ற நிலை உள்ளதையும், இந்திய குடியரசு தலைவர் ஆளுநர் மாளிகைக்கு வர இருக்கின்ற வேளையில், இத்தகைய குண்டு வீச்சு சம்பவம் என்பது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கான பெரும் எடுத்துகாட்டாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்