வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தின இரவில் இருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்தது. சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.
நேற்று முற்பகல் சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருந்த புயல் ஆனது தீவிரப் புயலாக வலுப்பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 2:30 மணி அளவில் சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த புயல், தற்போது சென்னையை விட்டு விலகி 200 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்றது.
தமிழ்நாட்டில் இருந்து புயல் விலக்கிச் சென்றதால் சென்னையில் வெகுவாக மழை வாய்ப்பு குறையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மழை நீர் தேங்கும் இடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் மின்சார வாரியம் சார்பில் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டு வருகிறது. மின்சாரம் வழங்கப்பட்டுள்ள பகுதிகளின் விவரங்களை மின்துறை அமைச்சர் தென்னரசு வெளியிட்டுள்ளார்.
அதன்படி சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்திற்குரிய ஜே.ஜே நகர், சாந்தி காலனி, அண்ணா நகர், சேத்துப்பட்டு, கலெக்டர் நகர், குமரன் நகர், மூர்த்தி நகர், சர்ச் சாலை, அடையாளம்பட்டு, எஸ்&பி பொன்னியம்மன் நகர் மற்றும் சென்னை மத்திய மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அண்ணாசாலை, கிரீம்ஸ் சாலை, நுங்கம்பாக்கம், ஸ்பென்சர் பிளாசா, பூக்கடை, சிந்தாதிரிப்பேட்டை, லஸ், ராயப்பேட்டை, மேற்கு மாம்பலம் மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய பகுதிகள், சென்னை வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட சி.எம்.பி.டி.டி, ஐசிஎப், இந்தியா பிஸ்டன், கீழ்பாக்கம், மணலி, நியூ கொளத்தூர், பேப்பர் மில்ஸ் ரோடு, பெரியார் நகர் ஆகிய பகுதிகள், சென்னை தெற்கு-l மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஆழ்வார் திருநகரில் ஒரு பகுதி, கிண்டி, ராமாபுரம், செயின்ட்ஸ் தாமஸ் மவுண்ட், வடபழனி, கெருகம்பாக்கம், போரூர் ஒரு பகுதி மற்றும் சென்னை தெற்கு இரண்டு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் மின் சேவை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் படிப்படியாக மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.