உலகத்தின் வல்லரசான அமெரிக்கா போன்ற நாடுகள்கூட இப்போது கண்ணீர் விட்டு கதறுகிறது என்றால் அது கரோனா வைரஸ் தொற்றுநோயைப் பார்த்துதான். இப்படி உலகம் முழுக்க 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது ஆட்கொள்ளி வைரஸ் கரங்களால் மனித குலத்தை வேட்டையாடி வரும் இந்த கரோனா. இந்தியாவிலும் மனிதர்களைக் காவு வாங்கி வருகிறது தமிழகத்தில் இதுவரை 234 பேர் இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களாக சிகிச்சையில் உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருவருக்கு கரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. சுமார் 300க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை ஆன்மீக நகரம் என்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவதும் இங்கேயே தங்கியிருப்பதும் உண்டு. இதனால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி ஐ.பி.எஸ் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திருவண்ணாமலை நகர்ப்பகுதிகளில் போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருப்பதை அறிந்து கொள்ளும் இளைஞர்கள் நகர்ப்பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் வலம் வராமல் கிராமப்புறப் பகுதிகளில் வலம் வரத் தொடங்கியுள்ளனர்.
இதையறிந்த மாவட்ட எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி புதிதாக ஒரு போலீஸ் டீம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதற்கு பெயர் ஈகிள் டீம். 50 இருசக்கர வாகனங்களில் போலீசார், கிராமப்புற பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். இதன்மூலம் வீட்டில் இருக்காமல் வெளியே சுற்றித் திரியும் நபர்களை பிடித்து முறையாக விசாரித்து தகுந்த காரணங்களை கேட்கிறார்கள். அப்படி இல்லாமல் திட்டமிட்டு வெளியே சுற்றுபவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்கிறார்கள். மாவட்ட எஸ்.பியின் இந்த புதுமையான நடவடிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.