புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ம.தி.மு.க தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “பத்திரிகையாளர்கள் குறித்து பா.ஜ.க தலைவர் பேசியுள்ள பேச்சு கண்டனத்திற்குரியது. இது போன்ற பேச்சுகள் அரசியல் தலைவர்களுக்கு அழகல்ல. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர் கடந்த 2 ஆண்டுகளாக என்.ஐ.ஏ. தொடர் கண்காணிப்பில் இருந்தவர். அப்படி இருந்த காலத்தில் ஆன்லைனில் தான் கொஞ்சம் கொஞ்சமாக வெடி பொருட்களை வாங்கி சேமித்துள்ளார். ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசைக் குற்றம் சொல்லி அரசியலாக்குகிறார். கடந்த 2 ஆண்டுகளில் யார் ஆட்சி நடந்தது என்பதை அண்ணாமலை தெரிந்து கொள்ள வேண்டும்.
விபத்து நடந்த 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்துள்ளது தமிழ்நாடு காவல்துறை. இந்த சம்பவத்தில் வெளிநாட்டு சதிகள் இருக்கலாம் என்பதால்தான் தமிழ்நாடு முதலமைச்சர் என்.ஐ.ஏ. விசாரணைக்குப் பரிந்துரை செய்துள்ளார்.” என்றார். மேலும், வைகோ குறித்த கேள்விக்கு, “வைகோ எப்போதும் சிறப்பாகவே செயல்படுகிறார். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது” எனத் தெரிவித்தார்.