கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் முகமது இர்ஃபான். இவர் கோவை கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை அன்னூர் செல்வதற்காக கருமத்தம்பட்டி நால் ரோடு சந்திப்பில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சந்தேகமான வகையில் நின்று கொண்டிருந்த இர்ஃபானை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்த போது, போதை மருந்துகள் இருப்பது தெரியவந்தது .
இதனையடுத்து அவர் தங்கியிருந்த அறைக்கு அழைத்துச் சென்ற போலீசார் சோதனை செய்ததில் போதை மருந்து மற்றும் கஞ்சா இருப்பதை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அந்த அறையில் உடன் தங்கி இருந்த நண்பர் ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.
கோவை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்துகள் விற்பனை செய்து வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தொடர்ச்சியாக புகார் வந்த நிலையில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் தங்களது கண்காணிப்பை அதிகப்படுத்தி உள்ளனர். கோவையில் தொடர்ச்சியாக போதை மருந்து விற்கும் கும்பல் கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.