தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பராமரிக்க வேண்டும் என்று தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதன்முதலாக பொறுப்பேற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.
அதனடிப்படையில் தி.மு.க இளைஞர் அணியினர் தமிழ்நாடு முழுவதும் நீர் நிலைகளிலும் குளங்களிலும் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் முதன் முதலாக ஒரு குளம் தூர்வாரும் பணியை உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்து ஊக்கப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, சென்னை வடக்கு மாவட்டம் மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 17வது வட்டத்தில் அடங்கிய தீயம்பாக்கம் பகுதியில் உள்ள அபி அம்மன் கோயில் குளத்தை தூர்வாரும் பணி செயல்படுத்த வேண்டும் என்று மாதவரம் வடக்குப் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.என்.அஜய் நாராயணன் தலைமையிலான இளைஞர் அணியினர் முடிவு செய்து, கடந்த ஒரு மாத காலமாக தூர்வாரும் பணி இரவு பகலாக நடைபெற்றது. இந்தப் பணியில் ஜே.சி.பி இயந்திரங்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என்று திரளாக கலந்து கொண்டு மேற்படி குளம் தூர்வாரும் பணி முடிவுற்றது.
இதனைத் தொடர்ந்து, தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் குளத்தில்நீரை ஊற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்து குளத்தைச் சுற்றி தூய்மையைப் பாதுகாக்கும் பொருட்டு மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார் .
பருவமழை தொடங்க உள்ள இந்த நேரத்தில் குளங்களை தூர்வாரி நீர்நிலைகளை பாதுகாக்க, தி.மு.க.வினரின் இளைஞர் அணியின் எடுக்கும் இந்த முயற்சியை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.