Skip to main content

வாக்காளர்களுக்கு கொடுக்க அமைச்சர் கல்லூரியில் வேட்டி - சேலை... திமுக புகார்!

Published on 01/03/2021 | Edited on 01/03/2021

 

DMK complaint in viralimalai pudukottai

 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு, கடந்த ஒரு வருடமாகவே அமைச்சர் விஜயபாஸ்கரின் 'சிவிபி பேரவை' என்ற பெயரில் 6 முறை பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தற்போது தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையும் மீறி தொடர்ந்து வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை, தட்டு உள்ளிட்ட பரிசுப் பொருட்களைக் கட்சி நிர்வாகிகள் மூலம் வீடு வீடாக வழங்கி வருவதாகவும், இப்பொருட்களை அவருக்குச் சொந்தமான இலுப்பூர் மேட்டுச்சாலையில் உள்ள கல்லூரியில் பதுக்கி வைத்திருப்பதாகவும், உடனடியாக இதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்கக் கோரியும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையிலான திமுகவினர் விராலிமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

 

நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்படும் என்றும் திமுகவினர் கூறியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.