காந்தி பிறந்த நாளான நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதே போல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பாளைய ஏகாம்பர நல்லூரில் நடந்த கிராம சபை கூட்டம் நடந்தது. இங்கு ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள சித்ரா ஏழுமலை கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார்.
கூட்டம் நடந்த பொழுது அங்கு குடி போதையில் வந்த சிலர் கூட்டத்தை நடத்த விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த சித்ரா ஏழுமலை, “நான் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த பெண். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கூட்டத்தை கூட்டினோம். அதில் கவுன்சிலரின் ஆட்கள் சிலர் குடித்துவிட்டு வந்து பிரச்சனை செய்தனர். கூட்டத்தையும் நடத்தவிடாமல் செய்தனர். பணிசெய்ய விடாமல் தடுத்ததால் ஊராட்சியில் ஆதி திராவிடர்களுக்கு இடஒதுக்கீடு தேவை இல்லை ” எனக் கூறினார்.
சித்ரா ஏழுமலையின் கணவர் கூறுகையில், “என் மனைவி வெற்றி பெற்று இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. இதுவரை எந்த ஒரு திட்டத்தையும் செய்ய விடாமல் தடுக்கிறார்கள். என்னை கேட்காமல் எதையும் செய்யக்கூடாது என கவுன்சிலர் கூறுகிறார். அவர் டாஸ்மாக் மேற்பார்வையாளர். இன்று நடந்த கூட்டத்தில் கவுன்சிலரின் ஆட்கள் மது குடித்துவிட்டு வந்து கூட்டத்தில் பிரச்சனை செய்து கூட்டத்தையும் நடத்த விடாமல் செய்து விட்டனர். மனைவி காவல் துறைக்கு தகவல் கொடுத்ததால் காவல் துறையின் பாதுகாப்புடன் நாங்கள் வீட்டிற்கு வந்தோம்” எனக் கூறினார்.
பட்டியல் சாதி என்பதாலேயே என்னால் எந்த ஒரு பணியையும் செய்ய முடிவதில்லை என்றும் சாதிய ரீதியாக பாகுபாடு காட்டி மிரட்டுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்ரா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.