இயக்குனர் மோடி, நடிகர்கள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.: -முத்தரசன்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் கூடி 'கட்சிப் பதவிகளுக்கு தினகரன் செய்த நியமனங்கள் செல்லாது' என்று நிறைவேற்றிய தீர்மானம், அதைத் தொடர்ந்து 'நான் நடவடிக்கை எடுத்தால் ஆட்சி களையும்' என்ற தினகரனின் செய்தியாளர் சந்திப்பு, 'சசிகலா குடும்பத்தை நீக்கினால் தான் இணைப்பு சாத்தியம்' என்ற ஓபிஎஸ் அணியின் முடிவு... இப்படி அதிமுகவில் நடக்கும் அமளிகள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனிடம் கேட்டோம்...
அதிமுக பொதுச்செயலாளராகவும், முதல் அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா செப்டம்பர் 22 மருத்துவமனைக்கு சென்ற பிறகு அந்த கட்சி மெல்ல மெல்ல கட்டுப்பாடுகளை இழந்து ஒரு சீரழிந்த நிலைக்கு சென்றுவிட்டது. தற்போது அதிமுக என்ற கட்சியே இல்லை. அதற்கு மாறாக தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறபடி அம்மா கட்சி என்றும், புரட்சித் தலைவி அம்மா கட்சி என்றும் இரு அணிகளாக இருக்கிறார்கள். மூன்றாவதாக தினகரன் ஒரு அணியை ஏற்படுத்தியிருக்கிறார்.
இவர்களுடைய பிரச்சனை, பதவியில் இருப்பவர்கள் தங்களுடைய பதவியை தக்க வைத்துக்கொள்வதும், பதவியில் இல்லாத ஓ.பி.எஸ். போன்றவர்கள் பதவிக்கு வரவேண்டும் என்பதுதான். இதுதான் இவர்களின் நோக்கம். இவர்களுக்கென்று ஒரு கொள்கையோ, கோட்பாடோ கிடையாது. இவர்களுக்குள் ஏற்பட்டுள்ள பதவியைப் பற்றிய, பதவி முரண்பாட்டை மேலும் முரண்பட செய்து, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது பாஜக. பகிரங்கமாகவே பாஜக பயன்படுத்தி வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.
இந்த சூழலில் இவர்கள் கூடி தீர்மானம் நிறைவேற்றி நீக்குவது, சேர்ப்பது போன்ற நாடங்களை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள். சசிகலாவை பொதுச்செயலாளராக்கியது ஓ.பன்னீர்செல்வம். அதேபோல ஓ.பன்னீர்செல்வத்தை முதல் அமைச்சராக்கியது சசிகலா. சசிகலா பொதுச்செயலாளரான பிறகு முதலமைச்சராக வேண்டும் என கேட்டபோது அதற்கு சம்மதம் தெரிவித்து ஓ.பி.எஸ்.தான் முன்மொழிந்தார். அதற்கு இரண்டு நாள் கழித்து தியானத்திற்கு சென்று எதிரான கருத்துக்களைச் சொன்னார்.
நீதிமன்றத்தின் உத்தரவு காரணத்தினால் சசிகலா முதலமைச்சராக ஆக முடியாது என்றதும், எடப்பாடி பழனிசாமியை முதல் அமைச்சராக சசிகலாதான் தேர்வு செய்கிறார். அதேநேரத்தில் கட்சியின் துணைப்பொதுச்செயலாளராக டிடிவி தினகரனையும் அறிவிக்கிறார். அப்போது யாரும் இதனை எதிர்க்கவில்லை. ஏற்றுக்கொண்டுதான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனை வேட்பாளராக நிறுத்தினார்கள். இப்பொழுது கட்சி ஒன்றாக வேண்டும், ஒரணியாக இருந்தால் நல்லது என்று தீர்மானக்கும் இடத்தில் இவர்கள் இல்லை. ஓ.பி.எஸ்.ஸோ, இ.பி.எஸ்.ஸோ முடிவு எடுக்கிற இடத்தில் இவர்கள் இல்லை. முடிவு எடுக்கிற இடத்தில் மோடி இருக்கிறார். மோடியின் உத்தரவுப்படி இவர்கள் செயல்படுகிறார்கள். இயக்குநர் மோடி. இவர்கள் நடிகர்கள்தான். இதில் கதாநாயகர் ஒருத்தர், வில்லனாக ஒருத்தரை சித்தரிக்கிறது மோடிதான். இயக்குநரின் முடிவுகளுக்கு இவர்கள் கட்டுப்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான இந்த பேச்சுவார்த்தை, சேர்ப்பது, நீக்குவது என்றெல்லாம் நடைபெறுகிறதே தவிர, கட்சியினுடைய சொந்த நலன் கருதியோ, அல்லது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நலன் கருதியோ இவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
கடந்த பல மாதங்களாக தமிழ்நாட்டில் பல உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டது. தமிழக மக்களின் நலன்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றியெல்லாம் இவர்கள் கவலைப்படவில்லை. இந்த பாதிப்புகள் அனைத்திற்குமே மத்திய அரசுதான் காரணம் என்று இவர்களுக்கு தெரியும். அப்படியிருந்தும் அதனை எதிர்த்து பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடக்கிறது. சோதனைக்கு உட்பட்ட ஒரு நபர் தான் பிரதமரை சந்திக்கிறார். பிரதமரோடு பேசுகிறார். மத்திய அமைச்சர்களுடன் பேசுகிறார். இது எந்த வகையில் பொருத்தமானது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவே இவை அனைத்திற்கும் தீர்வு கூறும் இடமாக டெல்லி மாறிபோய்விட்டது. டெல்லி என்ன நினைக்கிறதோ அதன்படிதான் இங்கு நடைபெறும்.
-வே.ராஜவேல்