தொப்பூர் அருகே 4 பேர் உயிரிழப்புக்கு காரணமான விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக இருந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இந்த விபத்தில் பலியானவர்கள் யார் யார் என்ற முழு விவரங்களும் தெரிய வந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இருந்து இரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி ஒரு லாரி சனிக்கிழமை (டிச. 12) வந்து கொண்டிருந்தது. அந்த லாரி, சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் அருகே வந்தபோது, திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. பிரேக் பிடிக்காமல் வேகமாக சென்ற அந்த லாரி, முன்னால் சென்ற மற்றொரு லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திற்குள், ஆந்திரா மாநிலத்தில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றிக்கொண்டு நீளமான கண்டெய்னர் லாரி ஒன்று சேலத்திற்கு வந்து கொண்டிருந்தது. தொப்பூர் கணவாய் இரட்டைப்பாலம் அருகே வந்தபோது, அந்த கண்டெய்னர் லாரியும் பிரேக் பிடிக்காமல் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார்களின் மீது வரிசையாக மோதியது.
கண்டெய்னர் லாரி வேகமாக மோதியதில், போக்குவரத்து நெரிசலால் ஏற்கனவே ஊர்ந்து சென்ற கார்கள், லாரிகள் ஒன்றின் மீது ஒன்றி ஏறி நிலைக்குத்தி நின்றன. 12 கார்கள், இரண்டு லாரிகள், ஒரு வேன் என மொத்தம் 15 வாகனங்கள் இந்த விபத்தில் சேதம் அடைந்தன. பல கார்கள், அப்பளம்போல் நொறுங்கின.
இந்த பயங்கர விபத்தில் நான்கு பேர் பலியாயினர். சம்பவம் நடந்த அன்று இறந்தவர்கள் பெயர் விவரங்கள் தெரியவரவில்லை. தற்போது பலியானோரின் பெயர்கள் தெரிய வந்துள்ளன.
விபத்தில் உயிரிழந்தவர்கள் பெயர் விவரம்:
1. மதன்குமார் (42), ஓமலூர், சேலம் மாவட்டம். தனியார் கட்டுமான நிறுவன மேலாளர்.
2. கார்த்திக் (38), இவர் மதன்குமாரின் கார் ஓட்டுநர்.
3. நித்தியானந்தம் (35), கோவை.
4. கண்ணன் (40), தர்மபுரி.
இந்த கோர விபத்துக்குக் காரணமான கண்டெய்னர் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா, தர்மபுரி மாவட்ட காவல்துறை எஸ்பி பிரவேஷ்குமார், தீயணைப்புத்துறையினர் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சாலையின் இருபுறமும் 5 கி.மீ. தொலைவுக்கு மேல் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து சீரடைய 5 மணி நேரத்திற்கு மேலானது.
இது ஒருபுறம் இருக்க விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வந்தனர். தொப்பூர் வனப்பகுதியில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
அவரை பிடித்து வந்து விசாரித்தபோது, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குத்புதீன் (30) என்பதும், அவர்தான் விபத்துக்குக் காரணமான கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். பிரேக் பிடிக்காததால் விபத்து நடந்ததா? அவர் சோர்வினால் கண் அயர்ந்தது காரணமா அல்லது குடிபோதையில் வாகனம் ஓட்டினாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.