போலிஸ் கண்காணிப்பையும் மீறி கிழிக்கப்படும் அமைச்சர் பதாகைகள்
புதுக்கோட்டை நகரில் அமைச்சர் விஜயபாஸ்கர் படம் போடப்பட்டு வைக்கப்படும் பதாகைகள் தொடர்ந்து கிழிக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் புதுக்கோட்டையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக போன மாதமே நகரில் பல இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. ஒபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைந்த பிறகும் அதில் ஒபிஎஸ் படம் இல்லாத பல பதாகைகள் கிழிக்கப்பட்டிருந்தது. அதில் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் மீது இபிஎஸ் தரப்பு கொடுத்த புகாரில் ஒபிஎஸ் தரப்பினர் 4 பேரை போலிசார் விசாரனை செய்தனர்.
அடுத்த சில நாட்களில் அமைச்சர் விஜயபாஸ்கர் படத்துடன் உள்ள ஒரு பதாகை கிழிக்கப்பட்டதாக திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார். இந்த பதாகை கிழிப்பு அத்துடன் முடியவில்லை. கடந்த ஞாயிற்றுக் கிழமை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தங்க தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சிக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் படத்துடன் வைக்கப்பட்டிருந்த பதாகையில் அமைச்சர் படம் கிழிக்கப்பட்ட நிலையில் அவசர அவசரமாக ஒட்டப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அமைச்சர் படத்துடன் வைக்கப்பட்டிருந்த பதாகை நேற்று இரவு 11 மணிக்குள் கிழிக்கப்பட்டுள்ளது. இப்படி அமைச்சர் விஜயபாஸ்கர் படம் உள்ள பதாகைகளை தொடர்ந்து கிழிப்பது யார் என்ற கேள்வி ரரக்களிடம் மட்டுமின்றி பொதுமக்கள், போலிசாரிடமும் எழுந்துள்ளது.
தொடர்ந்து அமைச்சர் படம் போடப்பட்டுள்ள பதாகைகள் கிழிக்கப்படுவதை அறிந்த திருச்சி ஐஜி அலுவலக அறிவுரைப்படி சில சீருடை இல்லாத போலிசாரை கண்காணிப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர் கண்காணிப்பில் ரகசியப் போலிசார் சுற்றி வரும் போது அவர்களுக்கு தெரியாமல் கிழிப்பது யார் என்ற வினாவும் காவல்துறை வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இரா.பகத்சிங்