Skip to main content

விழுப்புரம் அருகே முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

Published on 26/04/2018 | Edited on 26/04/2018
kalvettu


விழுப்புரம் மாவட்டம் வடகுறும்பூர் பகுதியில் 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த முதலாம் பராந்தகச் சோழனின் கல்வெட்டை பேராசிரியர் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் பிரியா கிருஷ்ணன் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் சி.பழனிசாமி, ஏ.கோவிந்த சாமி, முனைவர் பட்ட ஆய்வாளர் செ.சுபாஸ் ஆகியோரால் கள ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து தென்னகத் தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் பிரியா கிருஷ்ணன் கூறியதாவது,

தென்னகத் தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு செய்து வருகிறோம். விழுப்புரம் வடகுறும்பூர் கிராமத்தில் சிவன் கோவில் புனரமைப்பில் சில கல்வெட்டுகளை கண்டதாக எங்கள் அமைப்பின் உறுப்பினர் பழனிசாமி தந்த தகவலின் பேரில் அங்கு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கல்வெட்டுகள் சிதைந்தும் உடைந்தும் காணப்பட்டது. அவற்றை படி எடுத்துப் பார்த்தபோது, கல்வெட்டில் உள்ள எழுத்து 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கல்வெட்டு மதிரை கொண்ட பரகேசரி என்னும் பட்டம் பெற்ற முதலாம் பராந்தக சோழனின் (907-955) 30 ஆவது ஆட்சியாண்டில் பதிக்கப்பட்டுள்ளது. இன்று குறும்பூர் என்று அழைக்கப்படும் இவ்வூர் அந்நாளில் குறும்பியூர் என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டு செய்தி தெரிவிக்கிறது.


 

kalvettu


மேலும் இந்த ஆண்டில் (937 பொ.ஆ) பாடாவூரைச் சேர்ந்த காஞ்சை கம்பன் என்பவர் குறும்பியூர் நாவற்புலம் என்ற பெயருடைய நிலப்பகுதியின் வடப்புறத்தில் காட்டை அழித்து மேட்டுப் பகுதிகளை சமப்படுத்தி பயிர் செய்வதற்கு வசதியாக 1/8 அரைக்கால் நிலம் அதாவது 21/2 மா பராமரிப்புக்கள் தர்ம்மாக கொடுத்துள்ளான் என்றும் தெரிவிக்கிறது. இந்த தர்மத்தை காப்பவர்களின் காலடித் தூசியைத் தன் தலை மீது வைத்து போற்றுவேன் என்றும், இத்தர்மத்தை அழிப்பவர்கள் நரகம் செல்வார்கள் என்ற ஓம்படைக்கிளவியுடன் முடிகிறது.

இவ்வாறு அன்றையக் காலத்தில் ஏரி பராமரிப்புக்காக கொடுக்கப்படும் தானம் ஏரிப்பட்டி என்று அழைக்கப்பட்டது. இது பண்டைய நீர்ப்பாசன செயல்பாட்டிற்கு நல்லதொரு சான்றாகும். மற்றொரு துண்டு கல்வெட்டில் குடுத்தோம் எங்கள் நகரத்து ஆழ்வார்ஸ்ரீ போகத்துக்கும் நாங்கள் செய்து குடுத்த நி..என்று இருந்தது. இதன்படி அவ்வூர் நகரத்தார் இங்கு அமைந்திருந்த சிவன் கோயிலுக்கு நிலக்கொடை தந்தமையை இத்துண்டு கல்வெட்டால் அறிகிறோம்.. கோவிலின்றி இருந்த சிவலிங்கம் மற்றும் அம்பிகை திரு உருவங்கள் பாதுகாக்கப்பட்டு தற்போது ஊர்மக்களால் கோயில் கட்டும் பணி ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்