வண்டலூர் பூங்காவில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிகம் வீசப்படுவதை தவிர்க்க 10 ரூபாய் டெபாசிட் முறையை பூங்கா நிர்வாகம் மேற்கொண்டுள்ளதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் 1,200 க்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை அலட்சியமாக வீசிவிட்டு செல்வது தொடர்ந்து வரும் நிலையில் அவை அங்குள்ள விலங்குகளுக்கும், பூங்காவின் செழுமைக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை பயன்படுத்துவோர் முறையாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விழிப்புணர்வுகளை வழங்கினாலும் அவை முழு நிறைவை தரவில்லை.
இந்நிலையில் பூங்கா நிர்வாகம் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுடன் வரும் சுற்றுலா பயணிகளிடம் 10 ரூபாய் டெபாசிட் பெறும் முறையை கடந்த ஐந்தாம் தேதி அமல்படுத்தியது. அதன்படி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுடன் வரும் சுற்றுலாப் பயணிகளிடம் 10 ரூபாய் டெபாசிட் பெற்றுக்கொண்டு அவர்கள் கொண்டு வரும் பாட்டிலில் பிரத்தியேக ஸ்டிக்கர் ஒட்டப்படும். சுற்றுலாப் பயணிகள் வெளியேறும் பொழுது பிளாஸ்டிக் பாட்டிலை திரும்ப கொடுத்தால் டெபாசிட்டாக கொடுத்த 10 ரூபாயை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
இந்த முறை மிகவும் வரவேற்பையும், நல்ல பலனையும் கொடுத்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய விதி அமல்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே 2,300க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.