
விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இரண்டாவது முறையாக நேற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தொடர்ச்சியாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொள்ளாச்சி கொடூரத்தை போல் இந்த சம்பவம் மீண்டும் ஒரு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உத்தரவிடப்பட்ட நிலையில், இரு தினங்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடங்கினர். நேற்று 3வது நாளாக இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றது. முதல்நாள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 7 மணி நேரமாக விசாரணையானது நடைபெற்றது. இந்த சம்பவத்தில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் கைது செய்யப்பட்ட 8 பேர் வீடுகளிலும் அதிரடியாகச் சோதனை நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடைபெற்றது.
இதனையடுத்து நேற்று, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மீண்டும் ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் எட்டுக்கும் மேற்பட்டோருக்குத் தொடர்பு இருக்கலாம் என காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று மீண்டும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ள எட்டு பேரில் ஜுனைத் அகமது, ஹரிஹரன், மாடசாமி, பிரவீன் ஆகிய நான்கு பேரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில், 7 நாட்கள் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் எஸ்.பி வினோதினி மனுத்தாக்கல் செய்துள்ளார். அழிக்கப்பட்ட விவரங்களை மீட்டெடுக்க இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் செல்போன்கள் சைபர் க்ரைம் போலீசாருக்கு இன்று சிபிசிஐடி போலீசாரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.