செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (18.10.2023) கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தென் சென்னைப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, திமுக அரசு பதவி ஏற்றவுடன் இராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்பச் சாலையில் உள்ள பெருங்குடி கட்டணச் சாவடியில் சாலைப் பயன்பாட்டு கட்டணம் வசூல் செய்வது கைவிடப்பட்டது. இதனால் இப்பகுதி வழியாக செல்வோரும், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோரும் பெரும் பயனடைந்தனர். தற்போது இந்த சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. இதனால் சாலையின் பல பகுதிகள் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதே சாலையில் நாவலூரில் உள்ள கட்டண சாவடியிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது, என்ற இதே கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று, நாளை (19.10.2023) முதல் நாவலூர் கட்டண சாவடியிலும் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடியில் இன்று காலை முதல் சுங்க கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சுங்க கட்டணம் செலுத்தாமல் அவ்வழியாக எராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. முதல்வரின் அறிவிப்பு உடனடியாக செயல்பாட்டுக்கு வந்ததால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வாகன ஓட்டிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.