தமிழகத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு விதிமுறைகள் அப்படியே கடைபிடிக்கப்படும். மே மாதத்திற்கான ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு காரணமாக அரிசி அட்டைதாரர்களுக்கு மே மாத அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக தரப்படும். ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், அரிசி விலை இன்றி வழங்கப்படும். காலை 6 மணிமுதல் மதியம் ஒரு மணிவரை பேக்கரிகள் இயங்கலாம். பார்சல் விற்பனைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும். அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள் குடும்பத்திற்கும் இரண்டாவது முறையாக ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும். பிற மாநிலத் தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கான 15 கிலோ அரிசி, துவரம் பருப்பு, எண்ணெய் ஆகியவை வழங்கப்படும். தமிழகத்தில் ஒவ்வொரு நபரும் சமூக இடைவெளியை கடைபிடித்து கரோனாவை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.