“தமிழகத்திற்க அடிமை அரசு தேவையில்லை தி.மு.க. தலைமையிலான புதிய அரசு அமைய வேண்டும். இந்தத் தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி முறியடிக்கப்பட வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் கட்சியின் சார்பாக நடைபெற்ற தேர்தல் நிதியளிப்பு மற்றும் பிரச்சார துவக்க மாநாட்டில் பிரகாஷ் காரத் கலந்துகொண்டு பேசும்போது, “இந்தத் தேர்தல் தேசிய அளவில் ஒரு முக்கியத்துவமான தேர்தலாக உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசாங்கம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் கட்டுப்படுத்தப்படுகிற வழிநடத்தக்கூடிய ஒரு அரசாக உள்ளது. இந்த அரசு, இந்தியாவினுடைய அரசியல் அமைப்புச் சட்டத்தை, மதசார்பற்ற ஜனநாயக குடியரசு என்ற மாண்புகளை அழித்து ஒழித்துவிட்டு, இந்து ராஷ்டிரத்தை உருவாக்குகிற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
ஏழாண்டுகளாக நடைபெறும் இந்த மத்திய பா.ஜ.க. ஆட்சியை எதிர்க்கக்கூடிய ஒரு எதிர்க்கட்சிகூட இருக்கக்கூடாது என்றும், ஒரு ஒற்றை கட்சி ஆதிக்க ஆட்சியை உருவாக்க முயற்சிக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அப்படிப்பட்ட ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களை மத ரீதியாக, இன ரீதியாக துண்டாடக்கூடிய அரசாக உள்ளது. சிறுபான்மை மக்களைத் துண்டாடக்கூடிய நிலை உள்ளது. ஆட்சிக்கு எதிராக, அரசின் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தால், விமர்சனம் செய்தால் அவர்களை அரசியல் ரீதியாக, சமூக ரதீயாக ஒடுக்குகிறது. ஊடகங்களையும் ஒடுக்குகிறது. எதிர் கருத்துக்களைச் சொல்பவர்கள் மீது தேசத்துரோக சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவுசெய்கிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழான ஆட்சியை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில்தான் 5 மாநில தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் வழக்கம்போல நடைபெறும் தேர்தல் அல்ல. ஒரு மாற்று அரசாங்கத்தை உருவாக்குவதற்கு மட்டுமல்ல, மத்திய பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவதற்கும் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்குமான தேர்தலாக உள்ளது என்பதை ஆழமாக பார்க்க வேண்டும்.
மத்திய பாஜக அரசு எதைச் செய்தாலும் இந்துக்களுக்காக செய்வதாக கூறுகிறது. ஆனால், அப்படிப்பட்ட ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறதா? கடந்த 7 ஆண்டுகால மோடி ஆட்சியை நாம் ஆய்வு செய்தோமானால், பெருவாரியாக உள்ள இந்து மக்கள் மோடியின் திட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாட்டிலுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் என இந்து மக்களுக்கு எதிரான ஆட்சியாகத்தான் உள்ளது. பன்னாட்டு முதலாளிகளுக்கும் இந்திய பெருமுதலாளிகளுக்கும் அன்னிய மூலதனத்திற்கும் உதவி செய்யக்கூடிய திட்டங்கள்தான் அமைந்திருக்கின்றன. டெல்லியைச் சுற்றி கடந்த 3 மாதங்களாக விவசாயிகள் மிக பிரம்மாண்டமான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். கிட்டத்தட்ட 250 விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் இறந்துள்ளார்கள். நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடத்தாமல் மோடி அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடுமையான பனியில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். முழுக்க முழுக்க விவசாயிகள் சந்தையை கார்பரேட் நிறுவனங்களுக்கு திறந்துவிடுவதற்காகத்தான் இந்த 3 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தச் சட்டங்களால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். விவசாயிகளின் சுயசார்புக்கு இந்தச் சட்டம் வழிவகுப்பதாகப் பிரதமர் சொல்கிறார்.
ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேச எல்லைகளில் போராடக்கூடிய அந்த விவசாயிகளைக் கேட்டுப்பாருங்கள். உண்மையில் அம்பானிகளுக்கும் அதானிகளுக்குமான சுயசார்பு திட்டமாகத்தான் இந்த 3 கொடிய வேளாண் சட்டங்கள் இருக்கிறது என்பார்கள். அந்த உண்மையை நாம் நாட்டு மக்களுக்கு உரத்துச் சொல்ல வேண்டியுள்ளது. சமீபத்தில் தனியார்மயக் கொள்கையை மத்திய பட்ஜெட்டில் பாஜக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட துறைகளான தொலைத்தொடர்பு, இரும்பு மற்றம் எண்ணெய் வளத்துறை, பாதுகாப்பு தவிர கேந்திரம் அல்லாத அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்குத் தாரை வார்க்கப் போவதாக அறிவித்துள்ளது; அதன் பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
நாட்டிலுள்ள 15க்கும் மேற்பட்ட இரும்பு, எஃகு தொழிற்சாலைகள் பொதுத்துறை நிறுவனங்களாக உள்ளன. இவற்றில் நான்கை மட்டும் வைத்துக்கொண்டு மீதமுள்ள தொழிற்சாலைகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கவுள்ளது. இந்திய மக்கள் பல்லாண்டுகளாக கட்டிக்காத்து வந்த செல்வ வளங்களைச் சூறையாடுகிற வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளது. அதற்கு விசாகபட்டிணத்தில் நடைபெறும் சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம். அங்குள்ள அரசுக்குச் சொந்தமான இரும்பு எஃகு தொழிற்சாலையின் 100 சதவீத பங்குகளைத் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. ஆனால், மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக அந்த மாநில மக்கள் ஒன்றுபட்டு அந்த இரும்பு எஃகு தொழிற்சாலையைத் தனியாருக்குத் தாரை வார்க்க மாட்டோம் என்று தினந்தோறும் விசாகப்பட்டிணம் வீதிகளில் பிரம்மாண்டமான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது. நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம், சேலம் இரும்பு எஃகு ஆலை, திருச்சி பெல் மிகுமின் நிறுவனம் ஆகியவை ஆபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த நிறுவனங்களைப் பாதுகாக்க அதிமுக அரசு தயாராக இல்லை. மத்திய அரசு கொண்டு வருகிற அனைத்து சட்டங்களையும் ஆதரிக்கிற கட்சியாக அதிமுக உள்ளது. சமீபத்தில் பாஜக கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அதிமுக எம்.பி.க்கள் கைதூக்கி ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால், மக்களவையிலும் சரி மாநிலங்களவையிலும் சரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.க்கள் இளமரம் கரீம், ராகேஷ் ஆகிய இரண்டு பேர் எதிர்த்து உரத்து குரல் எழுப்பியதன் விளைவாக அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அப்படிப்பட்ட துணிச்சல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும்தான் இருக்கிறது.
அதே போல் கேரளாவில் நமது பினராயிவிஜயன் தலைமையிலான இடதுமுன்னணி அரசாங்கம் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டி தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றிய துணிச்சல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான் உண்டு. இதுதான் நமக்கும் பிற கட்சிகளுக்கும் உள்ள வேறுபாடு. ஆனால், தமிழகத்தில் ஆட்சிபுரியும் அதிமுக அரசு பாஜகவின் அடிமை அரசாக உள்ளது. அதற்கு எதிராக இந்த தேர்தல் களத்தில் நாம் களம் காண வேண்டும்.
மேலும் மத்திய பாஜக அரசு அதானி, அம்பானிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தியுள்ளது. 4 தொழிலாளர் சட்டங்களை உருவாக்கியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாவார்கள். இந்த தொழிலாளர் சட்டங்களை அதிமுக எம்.பி.க்கள் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கைதூக்கி ஆதரித்து வந்துள்ளனர். இந்த அரசைத்தான் அதிமுக தலைவர்கள் அப்பட்டமாக ஆதரிக்கிறார்கள். இந்தக் கட்சிகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இயக்கங்கள் பிரம்மாண்டமான போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றன. நமது சிஐடியுதான் விசாகப்பட்டிணத்தில் உள்ள இரும்பு எஃகு ஆலையைத் தனியாருக்குத் தாரைவார்க்கக் கூடாது என்று அனைத்து சக்திகளையும் திரட்டி போராடிக்கொண்டிருக்கிறது.
அதே போல டெல்லியில் போராடக்கூடிய விவசாயிகளை வழிநடத்திக்கொண்டிருப்பது நமது விவசாய சங்கத்தலைவர்கள் என்பதை பெருமையுடன் சொல்ல முடியும். அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் ஹன்னன்முல்லா, கே.கே.ராகேஷ் ஆகியோர் தலைமையிலான விவசாயிகளை, சங்கத்தலைவர்கள் அங்கேயே தங்கிப் போராடி, வழிநடத்தி வருகிறார்கள். பாஜகவின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக உறுதியாக களத்தில் நின்று போராடுவது நம்முடைய கட்சியும் இடதுசாரிக்கட்சிகளும்தான். எனவே தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக உறுதியான முறையில் போராட வேண்டும் என்று சொன்னால், சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய கட்சியின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வது மிக முக்கியமானது. அதுமட்டுமல்ல, இடதுசாரிக்கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்திற்கு ஏன் செல்ல வேண்டும் என்று சொன்னால், ஒரு புதிய அரசு உருவாகி அதை சரியான வழியில் செலுத்துவதற்கு நம்முடைய கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பது அவசியம்.
இந்துத்துவாவும் கார்ப்பரேட்டும் இணைந்த ஒரு மோசமான எதேச்சதிகார அரசாக மோடி அரசாங்கம் விளங்குகிறது என்பதைக் குறிப்பிட்டேன். உத்தரப்பிரதேசத்தில் முதல்வராக உள்ள யோகி ஆதித்ய நாத், ஒரு அப்பட்டமான மதவெறியராக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு சி.ஏ.ஏ. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய ஆயிரக்கணக்கானவர்கள் மீது வழக்கு போட்டார். அபராதமாக லட்சக்கணக்கான ரூபாய்களை வசூலித்தார். இளம் காதலர்கள் மீது ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் கடுமையான தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டார். ஆணும் பெண்ணும் விரும்பினால் மணம் முடித்துக்கொள்ளலாம், அதற்கு மதம் தடையில்லை என்று உயர் நீதிமன்றம் தெளிவாக சொன்ன பிறகும், அந்த தீர்ப்பை மதிப்பதற்கு யோகி அரசு தயாராக இல்லை.
அதே போல, பசுவதை என்ற பெயரில் பல மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக ஒரு பேயாட்சியை ஆர்.எஸ்.எஸ். - பாஜக நடத்தி வருகின்றன. இதுதான் மோடி சொல்லக்கூடிய புதிய இந்தியா. ராமர் கோவிலைக் கட்ட முயற்சிக்கிறார்கள். புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் கட்ட முயற்சிக்கிறார்கள். பழைய நாடாளுமன்ற கட்டடத்தை அருங்காட்சியமாக மாற்ற உள்ளனர். அந்த நாடாளுமன்றத்திற்குள் ஜனநாயகமும் அருங்காட்சியாக மாற்றப்படும். நாடுமுழுவதும் உள்ள கட்சிகளை பிஜேபி தன்வயப்படுத்தி வருகிறது.
அசாம் மாநிலத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அசாமில் உள்ள அசாம் கனபரிசத் கட்சியுடன் கூட்டணி வைத்த பிஜேபி, அந்தக் கட்சியை ஆக்கிரமித்து இப்போது அந்தக் கட்சியின் தலைவராக இருந்தவர் பாஜகவின் தலைவராக உள்ளார். அசாம் கனபரிசத் கட்சியை பாஜக விழுங்கிவிட்டது. நான் எச்சரிக்கிறேன் பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுகவிற்கும் இதே கதி ஏற்படும். அதிமுக பாஜகவின் கருவியாக உள்ளது. அதன் பின்புலத்தில் இருந்து அதிமுக பாஜகவால் இயக்கப்படுகிறது. அதிமுகவின் அடிமை அரசு தேவையில்லை. தமிழகத்தில் திமுக தலைமையிலான ஒரு புதிய அரசு அமைய வேண்டும். அதிமுக பிஜேபி கூட்டணியை வீழ்த்த வேண்டும்” என்று பேசினார்.