Skip to main content

வராத காவிரி ; கருகும் பயிர்கள்! மத்திய அரசைக் கண்டித்து சி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்! 

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

CPI Condemn central government in cauvery issue

 

காவிரியில் கரை புரண்டு ஓடி வரும் தண்ணீர் என்ற நம்பிக்கையோடு தமிழ்நாடு காவிரி பாசனப் பகுதியில் குருவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி முதலமைச்சர் தண்ணீர் திறந்துவிட்டார். தண்ணீர் வரத் தொடங்கியதுடன் டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி செய்யத் தொடங்கிய சில நாட்களில் மேட்டூர் அணையில் படிப்படியாக தண்ணீர் குறைந்தது.

 

சாகுபடி செய்யப்பட்ட குருவைப் பயிரைக் காப்பாற்ற தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலையில் கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான தண்ணீரை வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தும் தண்ணீர் கிடைக்கவில்லை. காவிரி ஆணையத்திலும் தீர்வு கிடைக்கவில்லை.

 

இந்த நிலையில் தான் தமிழ்நாடு விவசாயிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் முன்பு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், தண்ணீரைப் பெற்றுத் தராத மத்திய அரசைக் கண்டித்தும் கருகிய நெல் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் குறுவைப் பயிர்க் காப்பீடு திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினார். 

 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நாகுடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செங்கோடன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நாகுடி பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாகச் சென்று இந்தியன் வங்கி முன்பு கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியா கூட்டணி ஜெயித்தால் மேகதாது அணை கட்டப்படும்; முதல்வர் மௌனம் ஏன்? - அன்புமணி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 Anbumani condemns that Mekedatu Dam will be built if the Indian alliance wins

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மேகதாது அணை கட்டப்படும் என சித்தராமையா பேச்சு கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் காவிரி ஆற்றின் குறுக்கே  மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர்  சித்தராமையா கூறியிருக்கிறார்.  பெங்களூர் தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டியை  ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘’மேகேதாதுவில் அணை கட்ட மத்திய பாஜக அரசு அனுமதி அளிக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்’’ என்று கூறியிருக்கிறார்.  சித்தராமையாவின் இந்தப்  பேச்சு கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படியும்,  உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்படியும்  காவிரி  ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர்களிடமிருந்து இதற்கான வாக்குறுதியை நாடாளுமன்றத்தில் பல முறை நான் பெற்றுள்ளேன். உண்மை நிலை இவ்வாறு இருக்க மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகதாது அணை கட்டப்படும் என்று சித்தராமையா கூறுவது மத்திய அரசின் அதிகாரத்தை தவறாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் பயன்படுத்துவது ஆகும். சித்தராமையாவின் இந்தப் பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ஆகும்.

காங்கிரஸ்  ஆட்சியில் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று சித்தராமையா அறிவித்து 3 நாட்களாகியும், அதே கூட்டணியில் இருக்கும் திமுகவின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில்  மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களைக் காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. ஆனாலும்  அவர் அமைதியாக  இருப்பதன் பொருள் காங்கிரசின் நலன்களுக்காகவும், கர்நாடகத்தின் நலன்களுக்காகவும்  காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்க்கத் துணிந்து விட்டார் என்பதுதான்.

1970-ஆம் ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே  4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக  தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளைக் கலைஞர்  நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின்,  இப்போது மேகதாது அணைக் கட்டும்  விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார். அவரது இந்தத் துரோகத்திற்கு மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“மோடியின் நாய்க்குட்டிபோல் அமலாக்கத்துறை செயல்படுகிறது” - முத்தரசன்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Mutharasan criticism of BJP

புவனகிரி பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் சிதம்பரம் நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி பானைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய அவர், “அமலாக்கத்துறை மோடியின் நாய்க்குட்டி போல செயல்படுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அபராதம் விதித்துள்ளனர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை மோடி, அமித்ஷா ஆட்டி படைக்கிறார்கள். மோடி, தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் இருக்காது என கூறுகிறார். உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை அழித்து விடுங்கள் என கூறுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியை மட்டும் வைத்துக்கொண்டு சர்வாதிகாரி போல் செயல்படுவதற்காக அனைத்து கட்சிகளையும் ஒழிக்க திட்டமிட்டுள்ளார்.

மோடியின் தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையுமே செய்யவில்லை. விவசாயிகளுக்கு ஆதார விலை, சாமிநாதன் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போது கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார். கச்சத்தீவை கடந்த 10 ஆண்டுகளில் மீட்பதற்கான மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அவர் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதனை திமுக, கம்யூனிஸ்ட் பிரச்சினையாக பார்க்காமல் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும்.  மோடியிடம் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அப்படி சமூக நீதி அவர்களுக்கு இருந்தால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறேன் என கூறியதால் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்திருக்கமாட்டார்கள்.

பாஜக பத்தாண்டுகளில் செய்த தவறு கொஞ்ச நஞ்சமல்ல. சிறுபான்மை மக்களுக்கு எதிராக, சிறு குறு தொழில் நடத்துபவர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்கள் நிறைவேற்றினார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்தார்கள்.

இதற்கு அதிமுக ஆதரவளித்தது. தற்போது ஜனநாயகத்தை காப்போம் என  ஏமாற்று வேலை செய்கிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இவருடன் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவாசகம்,  மாவட்டச் செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் சேகர், வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.