கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை அடுத்த மேட்டுச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய பசுமாடு மேய்ச்சலுக்குச் சென்று விட்டு வீடு நோக்கி நேற்று இரவு 7 மணி அளவில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அதே பகுதியில் இருந்த 100 அடி உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
பசு மாடு இறந்தால் அந்த பசு மாட்டை வளர்க்கும் குடும்பத்திற்கு ஆகாது என்கிற ஒரு நம்பிக்கை கிராம மக்களிடம் உள்ளது. இந்த நம்பிக்கை மற்றும் ஒரு உயிர் தண்ணீரில் தத்தளிக்கிறதே எனப் பசு மாட்டை மீட்க முயற்சி செய்தனர். இரவு நேரம் என்பதால் கிராம மக்கள் பசு மாட்டை மீட்க முடியாமல் சிரமம் ஏற்பட்டதால் திருக்கோவிலூர் தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பசுமாட்டை கிணற்றின் மேல் கரைக்கு உயிருடன் கொண்டு வந்தனர்.
பல மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் பசு மாட்டை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு மாட்டின் உரிமையாளர் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் நன்றியைத் தெரிவித்தனர்.