தமிழ்நாட்டில் 22 ஆவின் நிறுவனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர், சேலம் மாவட்டம் தளவாய்ப்பட்டியில் செயல்பட்டுவரும் ஆவின் பால் பண்ணையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) நேரில் ஆய்வுசெய்தார். முன்னதாக அவர், பால் முகவர்களிடம் பால் வரத்து, சந்தைப்படுத்தலில் உள்ள சவால்கள் குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் நாசர் ஊடகத்தினரிடம் கூறியதாவது: "தமிழகத்தில் பால் உற்பத்தி, விற்பனை 1.50 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் வாக்குறுதிப்படி, பால் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு 270 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியின்போது ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. குறிப்பாக 234 பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரித்து பணிநீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுவருகிறது. அதேபோல 636 முதுநிலை, இளநிலை பணியாளர்கள் நியமனத்திலும் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வந்ததையடுத்து, அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தில் பால் வழங்குவது குறித்து முதல்வர் முடிவு செய்வார். பணிக்காலத்தில் இறந்த 48 ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
சென்னையில் பால் விலையைக் குறைக்காமல் தொடர்ந்து பழைய விலையிலேயே விற்றுவந்த 22 நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 22 ஆவின் நிறுவனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் ஆவினில் ஐஸ்கிரீம் உற்பத்தி ஆலை அமைப்பது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டில், கடந்த தீபாவளி பண்டிகையின்போது 1.50 டன் அளவுக்கு இனிப்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதற்கான ஆதாரங்கள் உள்ளன. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்." இவ்வாறு அமைச்சர் ஆவடி நாசர் கூறினார்.
ஆய்வின்போது, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், எம்எல்ஏ ராஜேந்திரன், பார்த்திபன் எம்.பி, ஆவின் நிர்வாக இயக்குநர் கந்தசாமி, சேலம் ஆவின் பொது மேலாளர் நர்மதா தேவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.