சாக்கடைக் கால்வாய்களை சுத்தப்படுத்தும் பணிகளில் தனி நபர்களை ஈடுபடுத்துவோர் மீது கிரிமினல் நடவடிக்கை பாயும் என சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் எச்சரித்துள்ளார்.
சேலத்தில் சாக்கடைக் கால்வாயை ஒருவர் பாதுகாப்பு உபகரணங்களின்றி, சுத்தம் செய்யும் காணொலி காட்சி, மாநகராட்சி நிர்வாகத்துடன் தொடர்ப்புபடுத்தி சமூக ஊடகங்களில் பரவியது. இது தொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் விசாரணை நடத்தினார். காணொலி காட்சியில் உள்ள நபர் மாநகராட்சி பணியாளர் அல்லாத தனி நபர் என்பது தெரிய வந்தது. அவர் வசித்து வரும் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளின் கோரிக்கையின் பேரில், அந்த நபர் சாக்கடை கால்வாயில் இறங்கி சுத்தம் செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, சேலம் மாநகராட்சியின் 60 கோட்டங்களிலும் மாநகராட்சி அனுமதியின்றி, தனிநபர்களை வைத்து சாக்கடைக் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகளை தவிர்க்க வேண்டும் என்று ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார். கழிவுநீர்க் கால்வாய்களில் ஏதேனும் அடைப்புகள் ஏற்பட்டு சுத்தம் செய்ய வேண்டியிருப்பின், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட கோட்டத்தின் சுகாதார மேற்பார்வையாளர் அல்லது சுகாதார ஆய்வாளர் அல்லது சுகாதார அலுவலரிடமோ தகவல் தெரிவிக்க வேண்டும்.
மாநகராட்சி அனுமதியின்றி தனிநபர்களைக் கொண்டு சுத்தப்படுத்தும் செயலில் ஈடுபடுத்துவோர் மீது குற்றவழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் மாநகராட்சியில் அனைத்துத் தூய்மைப் பணியாளர்களுக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், தளவாடப் பொருள்கள் போதிய அளவில் வழங்கப்பட்டு உள்ளன. தூய்மைப் பணியில் ஈடுபடும்போது பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். கழிவுநீர்க் கால்வாய்களை சுத்தம் செய்ய தனிநபரை அனுமதிப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் கிறிஸ்துராஜ் எச்சரித்துள்ளார்.