கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, "இந்தியாவில் கரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரிக்கிறது.தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.விமான நிலையத்தில் 2,10,538 பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தமிழகத்தில் மேலும் 21 இடங்களில் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. 3,371 வெண்டிலேட்டர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ளன. விரைவில் பரிசோதனை முடிவுகளை அறிந்து கொள்ள ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் (Rapid Test Kit) வாங்கப்படவுள்ளன.ரேபிட் டெஸ்ட் கருவிகள் (Rapid Test Kit) ஏப்ரல் 9- ஆம் தேதி கிடைத்த பிறகு வேகமாகப் பரிசோதனை செய்ய முடியும்.மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக ரூபாய் 500 கோடி நிதி வந்துள்ளது.தமிழகத்தில் சுமார் 10 லட்சம் பேரின் கண்காணிப்பு காலம் முடிவடைந்துள்ளது.
கரோனாவின் தாக்கம் குறைய தனிமைப்படுத்திக் கொள்வது மட்டுமே தீர்வு. வெளிநாடு சென்றிருந்தாலும், மாநாடு சென்றிருந்தாலும் அரசுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.நாட்டு மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கரோனா பரவலை ஒழிக்க முடியும்.அரசு சட்டம் பிறப்பித்தாலும் அதை நடைமுறைப்படுத்துவது மக்கள் கையில்தான் உள்ளது.துன்புறுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். காவல்துறையினரின் கஷ்டத்தைப் புரிந்துக் கொண்டு மக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை முடிந்த அளவு வீடுகளுக்கே சென்று வழங்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
சென்னையிலும் நடமாடும் காய்கறி திட்டத்தை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்படும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.21 நாட்களுக்குப் பிறகு நோயின் தீவிரத்தைப் பார்த்த பிறகே பள்ளித்தேர்வுகள் குறித்து ஆலோசிக்க முடியும்.சென்னையில் 37 பகுதிகள் சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.பல்வேறு தொழிலாளர் நல வாரியங்களில் உள்ளவர்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்படும். அரசின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டே உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது." இவ்வாறு முதல்வர் பேசினார்.