சென்னை சிந்தாதரிப்பேட்டையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த அமைச்சர் ஜெயக்குமார், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசங்களை வழங்கினார்.
பின்பு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், "சென்னையில் 600 காய்ச்சல் கிளினிக்கள் இயங்குகின்றன. கரோனா வைரஸில் இருந்து தப்பிப்பதற்கு மூன்று விசயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக்வசம் அணிய வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு (அல்லது) கிருமிநாசினி கொண்டு நன்றாகக் கழுவ வேண்டும். வீட்டிலும், வெளியிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். குடிசைப்பகுதியில் வசிப்போருக்கு முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 8 லட்சம் முதியவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். சென்னையில் கரோனா தடுப்புப் பணியில் 38,000- க்கும் மேற்பட்டவர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக 11,000 களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். நிர்வாக நடவடிக்கை காரணமாகவே சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டார். கரோனா விவகாரத்தில் யார் அரசியல் செய்தாலும் மக்களால் தனிமைப்படுத்தப்படுவார்கள். சூழலைப் பொறுத்து உரிய நேரத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்" என்றார்.