Skip to main content

இதற்கெல்லாம் இனி தடையில்லை... தமிழக அரசின் புதிய தளர்வுகள் குறித்த முழு விவரம்!

Published on 31/10/2020 | Edited on 31/10/2020

 

coronavirus lockdown relaxation tamilnadu cm palanisamy announced for today

 

தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை, நவம்பர் 30- ஆம் தேதி வரை நீட்டித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக, தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்குக் கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை சுமார் 50,000-ல் இருந்து தற்போது 25,000 நபர்கள் என்ற அளவிற்குக் குறைந்துள்ளது.

 

கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31/10/2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 30/11/2020 நள்ளிரவு 12.00 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டும், நோய்த் தொற்றின் தன்மையைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதி தவிர (Except Containment Zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 

 

பள்ளிகள் (9,10,11 மற்றும் 12- ஆம் வகுப்புகள் மட்டும்), அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் 16/11/2020 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

 

பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் 16/11/2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

 

கோயம்பேடு வணிக வளாகம்: தற்காலிக இடத்தில் தற்போது செயல்படும் மொத்த வியாபார பழக்கடைகள், 02/11/2020 முதலும், பழம் மற்றும் காய்கறி சில்லரை வியாபாரக் கடைகள் மூன்று கட்டங்களாக 16/11/2020 முதலும் கோயம்பேடு அங்காடி வளாகத்தில், அரசால் வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செய்லபட அனுமதிக்கப்படுகிறது.

 

பொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துச் சேவை (Sub Urban Trains) மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான  வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

 

சின்னத்திரை உட்பட திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 150 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

 

coronavirus lockdown relaxation tamilnadu cm palanisamy announced for today

 

திரையரங்கு உரிமையாளர்களிடமிருந்து திரையரங்குகளை திறக்க வரப்பெற்ற கோரிக்கைகளைப் பரிசீலித்து, தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவற்றை திரையிட்டும், ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள் (Multiplex), வணிக வளாகங்களில் (Shopping malls) உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்துத் திரையரங்குகளும் 50 சதவீதம் இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி 10/11/2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

 

மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள் 16/11/2020 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 நபர்கள் பங்கேற்கும் வகையில், நடத்த அனுமதிக்கப்படுகிறது.

 

cnc

 

பொழுதுபோக்குப் பூங்காக்கள் (Entertainment/Amusement Parks), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 10/11/2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

 

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, திருமண நிகழ்வுகளுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது.

 

ஏற்கனவே 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 01/11/2020 முதல் 60 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதிக்கப்படுகின்றன. 

 

தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் (Containment Zones) தற்போதுள்ள நடைமுறைகளின் படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும்.

 

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:-

 

நீச்சல் குளங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள்.

 

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

 

வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி மாநிலம் தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்பவர்களுக்கும் தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு (E-registration) முறை, தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

 

தமிழ்நாட்டில் கரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். குறிப்பாக நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், பொதுமக்கள் பண்டிகை காலங்களில் அதிகமாகக் கூடுவதைத் தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

 

nkn

 

பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், வெளியிடங்களுக்கு முகக்கவசத்தை அணிந்து சென்றும், சமூக இடைவெளியைத் தவறாமல் கடைப்பிடித்தும், அவசியத் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாகக் கட்டுப்படுத்த முடியும். 

 

எனவே, பொது மக்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நோய்த் தொற்றின் போக்குத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய்த் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு, எஞ்சியுள்ள கட்டுப்பாடுகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப தளர்வுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.' இவ்வாறு முதல்வர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்