தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு அக்டோபர் 31- ஆம் தேதியுடன் முடியும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று (28/10/2020) ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்குப் பின்னர், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.
மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவின் கருத்துகள் அடிப்படையில் அடுத்தக்கட்ட தளர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. திரையரங்குகள் திறப்பு, மின்சார ரயில் சேவையைத் தொடங்குவது பற்றி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஏற்கனவே முதல்வர் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.