கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பெரோஸ் ஏற்கனவே கேரளா சிறையில் உள்ளவர்களைச் சந்தித்துப் பேசியது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. தொடர்ந்து விசாரித்து வருகிறது. தற்போது அதில் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் பொட்டாசியம் நைட்ரேட், நைட்ரோ கிளிசரின் உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணாடித் துகள்கள், பேட்டரி, ஆணிகள் போன்ற பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.