கரோனோ தொற்று அதிகம் உள்ள மாவட்டமாக கோவை இருந்து கொண்டே வந்தது. கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் மெல்ல மெல்ல நோயிலிருந்து மீண்டு வந்ததால் கடந்த 1ந் தேதி கோவை சிவப்பு நிறத்தில் இருந்து ஆரஞ்சு வண்ணத்திற்கு மாற்றப்பட்டு இரண்டு நாட்கள் கடந்திருக்கின்றன.
கலெக்டர் ராசாமணி, கூடிய விரைவில் கோவை தொற்று இல்லாத பச்சை மண்டலமாக மாறிவிடும் என நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் கோவை வேலாண்டிபாளையத்தில் இன்று 3 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் பாசிட்டிவ் என்று வந்திருக்கிறது. 3 பேருக்கும் கரொனோ உறுதி செய்யப்பட்டிருப்பதால் மீண்டும் கோவை சிவப்பு நிறத்தை தழுவுமோ? என்கிற கவலையில் கோவை மக்கள் உள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன், 43 வயது பெண், 62 வயது ஆண் என 3 பேருக்கு கரொனோ பாதிப்பு உள்ளது தெரிந்தது. சில வாரங்களுக்கு முன் கேரளா மாநிலம் மலப்புரத்துக்கு இவர்கள் சென்று வந்தனர். தற்போது மீண்டும் கேரளா செல்வதற்காக, தாங்களாகவே கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதித்துக் கொண்டனர். அதில் 3 பேருக்கு பாதிப்பு உறுதி என முடிவு வந்துள்ளது. இவர்கள் வசித்த பகுதியை தனிமைப்படுத்தி, நோய் தடுப்பு நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் கோவையில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 142 ல் இருந்து 145 ஆக உயர்ந்து இருக்கிறது.