சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அதனைத் தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன. அதே சமயம் கடந்த ஓராண்டுக்கு மேலாகச் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பு மற்றும் அமலாக்கத்துறை தரப்பு என இரு தரப்பிற்கும் இடையே காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறு இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதியைக் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீதான வழக்கில் இன்று (26.09.2024) காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அதில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. எனவே செந்தில் பாலாஜி ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும். ரூ.25 லட்சத்திற்கு 2 நபர்கள் ஜாமீன் கொடுக்க வேண்டும். இவ்வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும், குற்றவியல் நடைமுறைகளுக்கு அவர் ஒத்துழைப்பு தரவேண்டும். ரூ.25 லட்சத்திற்கு 2 நபர்கள் ஜாமீன் கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதன் மூலம் சுமார் 15 மாதங்களுக்குப் பிறகு (471 நாட்கள்) சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியில் வர உள்ளது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்ற நீதிமன்ற தீர்ப்பு நகல் புழல் சிறை அதிகாரிகளுக்குக் கிடைத்தவுடன் இன்று மாலை அல்லது நாளை காலை செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகப் புழல் சிறையிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து அவரின் சொந்த தொகுதியான கரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!” என நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.