"நோய்த் தொற்றின் தற்போதைய போக்கை கருத்தில் கொண்டு மாணவர்களை நோய்த் தொற்றில் இருந்துகாக்க வரும் 15ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளும், 11 ஆம்வகுப்புக்கான விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்ற தமிழக முதல்வர் அவர்களின் இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்கக்கூடிய ஒன்றாகும்." என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஈரோடு யுவராஜா கூறியுள்ளார். மேலும் அவரது அறிக்கையில்,
"தமிழக மாணவர்கள் 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு பாடங்கள் அனைத்தையும் படித்து தேர்வுக்கு நல்ல முறையில் தங்களை தயார்படுத்தியிருந்தனர், இந்த நிலையில் கரோனா நோய் தொற்றின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் தேர்வு நடத்த இயலாமல் போனதே தவிர, தேர்வு எழுத முடியாததால் ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வித்திறன் குறைந்துவிடாது, எனவே, இந்த தேர்வுகள் ரத்துசெய்யப்பட்ட காரணத்தால் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு முடிவுகள் மற்றும் வருகை பதிவு ஆகியவற்றின்அடிப்படையில் மேல் வகுப்புக்கு தேர்ச்சிசெய்யப்படுவர்.
மேலும் மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு, காலாண்டு மற்றும்அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையில் 20% மதிப்பெண்களும் கணக்கிடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். எனவே, மேல்நிலை வகுப்பு மாணவர் சேர்க்கையில் எந்த குழப்பமும் ஏற்படாது. மாணவர்கள் அனைவரும் தங்களது வீடுகளை விட்டு வராமல், உடல்நலனை பார்த்து கொள்ளவேண்டும். இனிவரும் வகுப்புகளில் மாணவர்கள் நன்கு படித்து, தங்களை வளர்த்து கொள்ள வேண்டும்.
ஒட்டுமொத்த தமிழகமும் எடுத்த முடிவைத்தான் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் இதை தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் சார்பாக மனதார வரவேற்கிறோம்." என கூறியிருக்கிறார்.